டென்னிஸ்
அமெரிக்க ஓபன் டென்னிஸ்: 4–வது சுற்றில் பெடரர், ஜோகோவிச் கெர்பர் அதிர்ச்சி தோல்வி

அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் முன்னாள் சாம்பியன்கள் பெடரர், ஜோகோவிச் 4–வது சுற்றுக்குள் நுழைந்தனர்.
நியூயார்க், அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் முன்னாள் சாம்பியன்கள் பெடரர், ஜோகோவிச் 4–வது சுற்றுக்குள் நுழைந்தனர். முன்னணி வீராங்கனை ஜெர்மனியின் கெர்பர் அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.பெடரர்–ஜோகோவிச் ‘கிராண்ட்ஸ்லாம்’ அந்தஸ்து பெற்ற அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நடந்து வருகிறது. போட்டியின் 6–வது நாளான நேற்று முன்தினம் ஒற்றையர் பிரிவில் 3–வது சுற்று ஆட்டங்கள் நடந்தன.ஆண்கள் பிரிவில் 5 முறை சாம்பியனான சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர் 6–4, 6–1, 7–5 என்ற செட் கணக்கில் ஆஸ்திரேலியாவின் நிக் கைர்ஜியோசை தோற்கடித்து 17–வது முறையாக அமெரிக்க ஓபனில் 4–வது சுற்றுக்கு முன்னேறினார். பெடரர் அடுத்து ஜான் மில்மானை (ஆஸ்திரேலியா) எதிர்கொள்கிறார். மற்றொரு ஆட்டத்தில் நோவக் ஜோகோவிச் (செர்பியா) 6–2, 6–3, 6–3 என்ற செட் கணக்கில் பிரான்சின் ரிச்சர்ட் கேஸ்கியூட்டை எளிதில் வீழ்த்தினார்.முன்னாள் சாம்பியனான குரோஷியாவின் மரின் சிலிச், ஆஸ்திரேலியாவின் இளம் வீரர் அலெக்ஸ் டி மினாருடன் மல்லுகட்டினார். இதில் முதல் இரு செட்டுகளை பறிகொடுத்த (4–6, 3–6) மரின் சிலிச் அதன் பிறகு சரிவில் இருந்து மீண்டு எஞ்சிய மூன்று செட்டுகளை 6–3, 6–4, 7–5 என்ற செட் கணக்கில் கைப்பற்றி அதிர்ச்சி தோல்வியில் இருந்து தப்பினார். இந்த ஆட்டம் 4 மணி நேரம் நீடித்தது. அதே சமயம் 4–ம் நிலை வீரர் அலெக்சாண்டர் ஸ்வெரேவ் சக நாட்டவர் பிலிப் கோல்ஸ்கிரீப்பரிடம் 7–6 (1), 4–6, 1–6, 3–6 என்ற செட் கணக்கில் பணிந்தார். நிஷிகோரி (ஜப்பான்), டேவிட் கோபின் (பெல்ஜியம்), ஜோவ் சோசா (போர்ச்சுகல்) ஆகியோரும் தங்களது ஆட்டத்தில் வெற்றி கண்டனர்.கெர்பர், கிவிடோவா ‘அவுட்’ பெண்கள் பிரிவில் 5–ம் நிலை வீராங்கனையான பெட்ரா கிவிடோவா (செக்குடியரசு) 5–7, 1–6 என்ற நேர் செட்டில் 20–ம் நிலை வீராங்கனை அரினா சபலென்காவிடம் (பெலாரஸ்) மண்ணை கவ்வினார். இதன் மூலம் சபலென்கா, கிராண்ட்ஸ்லாம் போட்டி ஒன்றில் முதல்முறையாக 4–வது சுற்றை எட்டியுள்ளார்.இதே போல் முன்னாள் ‘நம்பர் ஒன்’ வீராங்கனையும், விம்பிள்டன சாம்பியனுமான ஜெர்மனியின் ஏஞ்சலிக் கெர்பரும் 3–வது சுற்றை தாண்டவில்லை. அவரை 3–6, 6–3, 6–3 என்ற செட் கணக்கில் சுலோவக்கியாவின் சிபுல்கோவா விரட்டினார். சிபுல்கோவா 4–வது சுற்றில் அமெரிக்காவின் மேடிசன் கீஸ்சுடன் மோத உள்ளார். இதே போல் தரவரிசையில் 6–வது இடம் வகிக்கும் பிரான்சின் கரோலின் கார்சியா 7–5, 4–6, 6–7 (4–7) என்ற செட் கணக்கில் 24–ம் நிலை வீராங்கனை சுவாரஸ் நவரோவிடம் (ஸ்பெயின்) 2 மணி 24 நிமிடங்கள் போராடி வீழ்ந்தார்.‌ஷரபோவா அசத்தல் இன்னொரு ஆட்டத்தில் ரஷியாவின் மரிய ‌ஷரபோவா 6–3, 6–2 என்ற நேர் செட்டில் ஆஸ்டாபென்கோவை (லாத்வியா) துவம்சம் செய்து 4–வது சுற்றுக்கு தகுதி பெற்றார். ஆச்சரியம் அளிக்கும் வகையில் ஜப்பானின் நவோமி ஒசாகா தன்னை எதிர்த்த சாஸ்னோவிச்சுக்கு (பெலாரஸ்) ஒரு கேம் கூட விட்டுக்கொடுக்காமல் 6–0, 6–0 என்ற நேர் செட்டில் வெற்றி கண்டு மிரட்டினார்.ஆண்கள் இரட்டையர் 2–வது சுற்று ஆட்டம் ஒன்றில் இந்தியாவின் திவிஜ் சரண்– நியூசிலாந்தின் ஆர்டெம் நிடாக் ஜோடி 3–6, 6–3, 3–6 என்ற செட் கணக்கில் லுகாஸ் குபோட் (போலந்து)–மார்சிலோ மெலோ (பிரேசில்) இணையிடம் தோற்று நடையை கட்டியது.