டென்னிஸ்
அமெரிக்க ஓபன் டென்னிஸ்: அரைஇறுதியில் ஜோகோவிச், நிஷிகோரி

அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் செர்பியா வீரர் ஜோகோவிச், ஜப்பான் வீரர் நிஷிகோரி ஆகியோர் அரைஇறுதிக்கு தகுதி பெற்றனர்.
நியூயார்க்,

‘கிராண்ட்ஸ்லாம்’ அந்தஸ்து பெற்ற அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையரில் நேற்று முன்தினம் இரவு நடந்த கால்இறுதி ஆட்டம் ஒன்றில் 2 முறை சாம்பியனும், முன்னாள் நம்பர் ஒன் வீரருமான ஜோகோவிச் (செர்பியா), உலக தரவரிசையில் 55-வது இடத்தில் உள்ள ஆஸ்திரேலிய வீரர் ஜான் மில்மானை சந்தித்தார்.

2 மணி 48 நிமிடம் நடந்த இந்த மோதலில் ஜோகோவிச் 6-3, 6-4, 6-4 என்ற நேர்செட்டில் ஜான் மில்மானை தோற்கடித்து 11-வது முறையாக அரைஇறுதிக்குள் நுழைந்தார்.

இன்னொரு கால்இறுதியில் உலக தரவரிசையில் 21-வது இடத்தில் உள்ள ஜப்பான் வீரர் நிஷிகோரி, 7-ம் நிலை வீரரான மரின் சிலிச்சை (குரோஷியா) எதிர்கொண்டார். பரபரப்பான இந்த ஆட்டத்தில் இருவரும், ஒருவருக்கொருவர் சளைத்தவர் இல்லை என்பது போல் ஆக்ரோஷமாக விளையாடி ரசிகர்களை இருக்கையின் நுனிக்கே வரவைத்தனர்.

4 மணி 8 நிமிடம் நீடித்த இந்த ஆட்டத்தில் நிஷிகோரி 2-6, 6-4, 7-6 (7-5), 4-6, 6-4 என்ற செட் கணக்கில் போராடி மரின் சிலிச்சை வீழ்த்தி 3-வது முறையாக அரைஇறுதிக்கு முன்னேறினார். 2014-ம் ஆண்டு அமெரிக்க ஓபன் இறுதிப்போட்டியில் மரின் சிலிச், நிஷிகோரியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்று இருந்தார். அந்த தோல்விக்கு நிஷிகோரி பதிலடி கொடுத்துள்ளார். அரைஇறுதியில் நிஷிகோரி, ஜோகோவிச்சுடன் மல்லுக்கட்ட இருக்கிறார்.

பெண்கள் ஒற்றையர் பிரிவின் கால்இறுதி ஆட்டம் ஒன்றில் அமெரிக்க வீராங்கனை மேடிசன் கீஸ் 6-4, 6-3 என்ற நேர்செட்டில் கார்லா நவரோவாவை (ஸ்பெயின்) சாய்த்து அரைஇறுதியை எட்டினார்.

மற்றொரு ஆட்டத்தில் 20 வயதான ஜப்பான் வீராங்கனை நவோமி ஒசாகா 6-1, 6-1 என்ற நேர்செட்டில் உக்ரைன் வீராங்கனை சுரெங்கோவை பந்தாடி முதல்முறையாக அரைஇறுதிக்கு தகுதி பெற்றார். இதன் மூலம் 1996-ம் ஆண்டுக்கு பிறகு கிராண்ட்ஸ்லாம் போட்டி ஒன்றில் அரைஇறுதிக்கு முன்னேறிய முதல் ஜப்பான் வீராங்கனை என்ற பெருமையை ஒசாகா பெற்றார். அரைஇறுதியில் நவோமி ஒசாகா, மேடிசன் கீஸ்சுடன் மோதுகிறார்.