அமெரிக்கன் ஓபன் டென்னிஸ்: இறுதிப்போட்டிக்குள் நுழைந்தார் செரீனா வில்லியம்ஸ்

அமெரிக்க ஓபன் டென்னிஸின் அரையிறுதிப்போட்டியில் செரீனா வில்லியம்ஸ், செவஸ்தோவாவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். #SerenaWilliams

Update: 2018-09-07 01:43 GMT
நியூயார்க்,

கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நடந்து வருகிறது.

பெண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த கால்இறுதி ஆட்டம் ஒன்றில் 6 முறை சாம்பியனும், முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனையுமான செரீனா வில்லியம்ஸ் (அமெரிக்கா) 6-4, 6-3 என்ற நேர்செட்டில் செக்குடியரசு வீராங்கனை கரோலினா பிளிஸ்கோவாவை தோற்கடித்து அரைஇறுதிக்குள் நுழைந்தார். 36 வயதான செரீனா வில்லியம்ஸ் இந்த வெற்றியை எட்ட 1 மணி 26 நிமிடம் மட்டுமே பிடித்தது.

இன்னொரு ஆட்டத்தில் லாத்வியா வீராங்கனை செவஸ்தோவா 6-2, 6-3 என்ற நேர்செட்டில் நடப்பு சாம்பியனான ஸ்லோனே ஸ்டீபன்சுக்கு (அமெரிக்கா) அதிர்ச்சி அளித்து அரைஇறுதிக்குள் தடம் பதித்தார்.

இந்நிலையில் அரைஇறுதியில் செவஸ்தோவா, செரீனா வில்லியம்சை எதிர்கொண்டார். போட்டி ஆரம்பித்ததில் இருந்தே ஆதிக்கம் செலுத்தி வந்த செரீனா வில்லியம்ஸ் 6-0, 6-3 என்ற நேர்செட் கணக்கில் லாத்வியா வீராங்கனை செவஸ்தோவாவை தோற்கடித்தார். 6 முறை சாம்பியனான செரீனா வில்லியம்ஸ் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ள நிலையில் தனது 24-வது கிராண்ட் ஸ்லாம் பட்டத்தை எதிர்நோக்கியுள்ளார்.

மேலும் செய்திகள்