டென்னிஸ்
அமெரிக்க ஓபன் டென்னிஸ்: ஜப்பான் வீராங்கனை ஒசாகா இறுதிப்போட்டிக்கு முன்னேறி சாதனை

அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் ஜப்பான் வீராங்கனை ஒசாகா இறுதிப்போட்டிக்கு முன்னேறி சாதனை படைத்துள்ளார். பட்டத்துக்கான இறுதி ஆட்டத்தில் அவர் செரீனா வில்லியம்சுடன் இன்று மோத இருக்கிறார்.
நியூயார்க்,

‘கிராண்ட்ஸ்லாம்’ அந்தஸ்து பெற்ற அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நடந்து வருகிறது. போட்டியின் 11-வது நாளான நேற்று முன்தினம் நடந்த பெண்கள் ஒற்றையர் அரைஇறுதியில் 6 முறை சாம்பியனும், முன்னாள் ‘நம்பர் ஒன்’ வீராங்கனையுமான செரீனா வில்லியம்ஸ் (அமெரிக்கா), லாத்வியா வீராங்கனை செவஸ்தோவாவை சந்தித்தார்.

66 நிமிடம் நடந்த இந்த ஆட்டத்தில் அனுபவம் வாய்ந்த செரீனா வில்லியம்ஸ் 6-3, 6-0 என்ற நேர்செட்டில் செவஸ்தோவாவை பதம்பார்த்து இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். இதுவரை 23 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்று இருக்கும் செரீனா வில்லியம்ஸ் கிராண்ட்ஸ்லாம் போட்டியில் இறுதிப்போட்டிக்குள் நுழைவது இது 31-வது முறையாகும். இதில் 9 முறை அமெரிக்க ஓபனில் இறுதி சுற்றை எட்டியதும் அடங்கும்.

மற்றொரு அரைஇறுதியில் உலக தரவரிசையில் 19-வது இடம் வகிக்கும் ஜப்பான் வீராங்கனை நவோமி ஒசாகா, 14-ம் நிலை வீராங்கனையான மேடிசன் கீஸ்சை (அமெரிக்கா) எதிர்கொண்டார்.

இதில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய நவோமி ஒசாகா எந்த ஒரு சர்வீசையும் விட்டுக்கொடுக்காமல் 6-2, 6-4 என்ற நேர்செட்டில் கடந்த ஆண்டு 2-வது இடம் பெற்ற மேடிசன் கீஸ்சை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் அடியெடுத்து வைத்தார். ஒசாகாவின் சர்வீசை பிரேக் செய்ய மேடிசன் கீஸ்சுக்கு 13 முறை வாய்ப்பு கிடைத்தும் அதில் ஒன்றை கூட பயன்படுத்திக் கொள்ளவில்லை. இந்த வெற்றியை பெற ஒசாகாவுக்கு 1 மணி 25 நிமிடம் தேவைப்பட்டது. இதன் மூலம் கிராண்ட்ஸ்லாம் வரலாற்றில் இறுதிப்போட்டிக்கு முன்னேறிய முதல் ஜப்பான் வீராங்கனை என்ற மகத்தான பெருமையை 20 வயதான நவோமி ஒசாகா பெற்றார்.

வெற்றிக்கு பிறகு நவோமி ஒசாகா அளித்த பேட்டியில், ‘கிராண்ட்ஸ்லாம் போட்டியின் இறுதி ஆட்டத்தில் செரீனா வில்லியம்சுடன் விளையாட வேண்டும் என்பது எனது சிறு வயது கனவு. அந்த கனவு தற்போது நனவாகி இருப்பது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. இதை என்னால் நம்பவே முடியவில்லை. செரீனாவுக்கு எதிரான ஆட்டத்தை மற்றொரு ஆட்டமாக தான் கருதுகிறேன். என்னுடைய முன்மாதிரியாக அவரை நினைக்கவில்லை. அவரை ஒரு எதிராளியாகவே பாவிக்கிறேன்.’ என்றார்.

மேலும் ஒசாகா கூறுகையில், ‘கிராண்ட்ஸ்லாம் பட்டம் ஒன்றை நான் வென்றால் அது முதலில் அமெரிக்க ஓபனாக இருக்க வேண்டும் என்று நான் எப்போதும் நினைப்பது உண்டு. ஏனெனில் நான் சிறுவயதில் இருந்தே வளர்ந்த இடம் இது. மேலும் எனது தாத்தா, பாட்டி நேரில் வந்து போட்டியை பார்க்க முடியும்’ என்று குறிப்பிட்டார்.

ஒசாகா, ஜப்பானில் உள்ள ஒசாகா என்ற இடத்தில் பிறந்தவர். ஆனால் 3 வயதிலேயே அவர் அமெரிக்காவுக்கு இடம் பெயர்ந்து தற்போது புளோரிடாவில் வசிக்கிறார். அவர் இரட்டை குடியுரிமை பெற்றுள்ளார்.

மகுடத்துக்கான இறுதிப்போட்டியில் செரீனா-ஒசாகா இன்று பலப்பரீட்சை நடத்துகிறார்கள். இந்திய நேரப்படி நள்ளிரவு 1.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் செலக்ட் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது. இதில் 36 வயதான செரீனா வாகை சூடினால், அதிக கிராண்ட்ஸ்லாம் கைப்பற்றிய வீராங்கனையான ஆஸ்திரேலியாவின் மார்கரெட் கோர்ட்டின் (24 கிராண்ட்ஸ்லாம்) சாதனையை சமன் செய்து விடுவார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதே சமயம் அவருக்கு அதிர்ச்சி வைத்தியம் அளிக்க காத்திருக்கும் ‘இளம் புயல்’ ஒசாகா, கடந்த மார்ச் மாதம் நடந்த மியாமி ஓபன் டென்னிஸ் போட்டியில் செரீனா வில்லியம்சை தனது முதல் சந்திப்பிலேயே வீழ்த்தி இருந்தார் என்பது நினைவு கூரத்தக்கது.