டென்னிஸ்
அமெரிக்க ஓபன் டென்னிஸ்: காயம் காரணமாக ரபெல் நடால் விலகல்

அமெரிக்க ஓபன் டென்னிஸ் அரையிறுதி போட்டியில் இருந்து ஸ்பெயின் வீரர் ரபெல் நடால் காயம் காரணமாக விலகியுள்ளார். #RafaelNadal
நியூயார்க்,

கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நடந்து வருகிறது. ஆண்கள் ஒற்றையர் பிரிவு கால்இறுதி ஆட்டம் ஒன்றில் நடப்பு சாம்பியனும், நம்பர் ஒன் வீரருமான ரபெல் நடால் (ஸ்பெயின்), ஆஸ்திரேலிய வீரர் டொமினிக் திம்மை சந்தித்தார்.

விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் முதல் செட்டில் ஒரு கேமை கூட கைப்பற்றாமல் 0-6 என்ற கணக்கில் சரண்டர் அடைந்த ரபெல் நடால் அதன் பிறகு தனது அனுபவத்தின் மூலம் ஆக்ரோஷமாக விளையாடி அடுத்த 2 செட்களை 6-4, 7-5 என்ற கணக்கில் தனதாக்கி எழுச்சி பெற்றார். 4-வது செட்டை டொமினிக் திம் 7-6 (7-4) என்ற கணக்கில் சொந்தமாக்கினார்.

இதனால் ஆட்டம் 5-வது செட்டுக்கு சென்றது. கடைசி செட்டில் இருவரும் மாறி, மாறி புள்ளிகள் எடுத்ததால் ஆட்டம் பரபரப்பானது. டைபிரேக்கர் வரை சென்ற கடைசி செட்டை ரபெல் நடால் 7-6 (7-5) என்ற கணக்கில் போராடி வென்று அரைஇறுதிக்கு முன்னேறினார். 2009-ஆம் ஆண்டு சாம்பியனான அர்ஜென்டினா வீரர் ஜூவான் மார்ட்டின் டெல்போட்ரோவை ரபெல் நடால் அரையிறுதியில் எதிர்கொள்ளவிருந்தார். 

இந்நிலையில் அரையிறுதி போட்டியில் விளையாடி கொண்டிருக்கையில் திடீரென முழங்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக போட்டியை தொடர முடியாத சூழ்நிலை ஏற்பட்டதால் ரபெல் நடால் அரையிறுதியிலிருந்து விலகுவதாக அறிவித்தார். இதையடுத்து நடாலை எதிர்த்து விளையாடிய டெல்போட்ரோ இறுதி போட்டிக்கு தகுதி பெற்றார்.