அமெரிக்க ஓபன் டென்னிஸ்: இறுதிப்போட்டியில் ஜோகோவிச்-டெல்போட்ரோ

அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் ஜோகோவிச், டெல்போட்ரோ ஆகியோர் இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்கள். நம்பர் ஒன் வீரரான ரபெல் நடால் காயம் காரணமாக அரைஇறுதியில் பாதியில் விலகினார்.

Update: 2018-09-08 23:15 GMT
நியூயார்க்,

‘கிராண்ட்ஸ்லாம்’ போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நடந்து வருகிறது. போட்டியின் 12-வது நாளான நேற்று முன்தினம் நடந்த ஆண்கள் ஒற்றையர் அரைஇறுதியில் நடப்பு சாம்பியனும், ‘நம்பர் ஒன்’ வீரருமான ரபெல் நடால் (ஸ்பெயின்), உலக தரவரிசையில் 3-வது இடத்தில் உள்ள ஜூவான் மார்ட்டின் டெல்போட்ரோவை (அர்ஜென்டினா) எதிர்கொண்டார்.

விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் ரபெல் நடால் 6-7 (3-7), 2-6 என்ற கணக்கில் பின்தங்கி இருந்த நிலையில் காயம் காரணமாக போட்டியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். வலது முழங்காலில் ஏற்பட்ட காயத்துக்கு 2-வது முறையாக ‘பேண்டேஜ்’ மாற்றிய அவர் வலி அதிகரித்ததை தொடர்ந்து விலகல் முடிவை மேற்கொண்டார். இதனால் டெல்போட்ரோ வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டு இறுதிப்போட்டிக்குள் நுழைந்தார். 2009-ம் ஆண்டு சாம்பியனான டெல்போட்ரோ அதன் பிறகு தற்போது தான் இறுதிப்போட்டிக்கு முன்னேறி இருக்கிறார்.

32 வயதான ரபெல் நடால் அமெரிக்க ஓபன் போட்டியில் இருந்து காயம் காரணமாக பாதியில் விலகுவது இதுவே முதல் முறையாகும். கடந்த ஜனவரி மாதத்தில் நடந்த ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் மரின் சிலிச்க்கு (குரோஷியா) எதிரான கால்இறுதி ஆட்டத்திலும் ரபெல் நடால் காயம் காரணமாக விலகி இருந்தார்.

மற்றொரு அரைஇறுதி ஆட்டத்தில் 2 முறை சாம்பியனும், முன்னாள் நம்பர் ஒன் வீரருமான ஜோகோவிச் (செர்பியா) 6-3, 6-4, 6-2 என்ற நேர்செட்டில் 19-ம் நிலை வீரரான நிஷிகோரியை (ஜப்பான்) வீழ்த்தி 8-வது முறையாக இறுதிப்போட்டிக்குள் அடியெடுத்து வைத்தார். இந்த ஆட்டம் 2 மணி 23 நிமிடம் நீடித்தது.

இன்று நடைபெறும் மகுடத்துக்கான இறுதிப்போட்டியில் ஜோகோவிச்-டெல்போட்ரோ பலப்பரீட்சை நடத்துகிறார்கள். இந்திய நேரப்படி நள்ளிரவு 1.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டம் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் செலக்ட் சேனலில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது. டெல் போட்ரோவுடன் 18 முறை மோதி இருக்கும் ஜோகோவிச் அதில் 14-ல் வெற்றி கண்டுள்ளார்.

ஆண்கள் இரட்டையர் பிரிவின் இறுதி ஆட்டத்தில் அமெரிக்காவின் மைக் பிரையன்-ஜாக் சோக் ஜோடி 6-3, 6-1 என்ற நேர்செட்டில் லூகாஸ் குபோட் (போலந்து)-மார்செலோ மெலோ (பிரேசில்) இணையை தோற்கடித்து சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.

மேலும் செய்திகள்