கத்தார் ஓபன் டென்னிஸ்: ஹாலெப்பை வீழ்த்தி பட்டத்தை வென்றார், மெர்டென்ஸ்

கத்தார் ஓபன் பெண்கள் சர்வதேச டென்னிஸ் போட்டி டோகாவில் நடந்தது.

Update: 2019-02-17 21:30 GMT

டோகா, 

கத்தார் ஓபன் பெண்கள் சர்வதேச டென்னிஸ் போட்டி டோகாவில் நடந்தது. இதில் நேற்று முன்தினம் இரவு நடந்த இறுதி ஆட்டத்தில் முன்னாள் சாம்பியனும், 3–ம் நிலை வீராங்கனையுமான சிமோனா ஹாலெப் (ருமேனியா), தரவரிசையில் 21–வது இடத்தில் உள்ள எலிஸ் மெர்டென்சை (பெல்ஜியம்) சந்தித்தார். இதில் முதல் செட்டை ஹாலெப் தனதாக்கினார். இந்த செட்டின் போது முதுகுவலியால் அவதிப்பட்ட மெர்டென்ஸ், சிகிச்சை எடுத்துக்கொண்டு ஆட்டத்தை தொடர்ந்தார். அடுத்த இரு செட்டுகளில் எழுச்சி பெற்ற மெர்டென்ஸ் 3–6, 6–4, 6–3 என்ற செட் கணக்கில் ஹாலெப்புக்கு அதிர்ச்சி அளித்து பட்டத்தை சொந்தமாக்கினார். இந்த ஆட்டம் 2 மணி 13 நிமிடங்கள் நீடித்தது.

23 வயதான எலிஸ் மெர்டென்ஸ், தனது டென்னிஸ் வாழ்க்கையில் வென்ற மிகப்பெரிய சாம்பியன் கோப்பை இதுவாகும். இதில் கால்இறுதி, அரைஇறுதி, இறுதிப்போட்டிகளில் டாப்–10 இடத்திற்குள் உள்ள வீராங்கனைகளை அவர் சாய்த்தது குறிப்பிடத்தக்கது. மெர்டென்சுக்கு ரூ.1.10 கோடி பரிசுத்தொகையும், 470 தரவரிசை புள்ளிகளும் வழங்கப்பட்டன. 2–வது இடத்தை பிடித்த ஹாலெப், ரூ.60 லட்சத்தை பரிசாக பெற்றார்.

மேலும் செய்திகள்