சிவன் கோவில்களில் சனி பிரதோஷ விழா: நந்திக்கு மகா அபிஷேகம்.. திரளான பக்தர்கள் தரிசனம்

சனி பிரதோஷத்தை முன்னிட்டு நடைபெற்ற சிறப்பு அபிஷேக ஆராதனைகளில் அந்தந்த பகுதி மக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.;

Update:2025-10-05 11:50 IST

சனிப்பிரதோஷத்தையொட்டி தஞ்சை பெரிய கோவிலில் நேற்று சிறப்பு வழிபாடு நடந்தது. அப்போது மகா நந்தியெம்பெருமானுக்கு பால், மஞ்சள் அபிஷேகம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

ஆரணி புதுகாமூர் பகுதியில் பெரியநாயகி சமேத புத்திரகாமேட்டீஸ்வரர் சிவன் கோவிலில் சனி பிரதோஷ விழாவை முன்னிட்டு நந்திக்கும், சிவபெருமானுக்கும் சிறப்பு அபிஷேகங்கள், மகா அலங்காரம், மகா தீபாராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். மேலும் கோட்டை கைலாயநாதர் கோவில், பூமிநாதர் கோவில், காமக்கூரில் உள்ள சந்திரசேகர சுவாமி கோவில், முள்ளிப்பட்டில் உள்ள ஆபத்சாகயேஸ்வரர் கோவில், சேவூர் - பையூர் பகுதியில் உள்ள விருப்பாச்சீஸ்வரர் கோவில், அடையபலத்தில் உள்ள காலகண்டேஸ்வரர், நீலகண்டேஸ்வரர் கோவில் அக்ராபாளையத்தில் உள்ள மார்க்க சகாயேஸ்வரர் கோவில் உள்ளிட்ட சிவன் கோவில்களிலும் பிரதோஷ விழா நடந்தது.

வந்தவாசி ஜலகண்டீஸ்வரர் கோவிலில் நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு தங்க கவசத்துடன் நந்தி பகவான் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதேபோல் மும்முனி பைபாஸ் ரோட்டில் அமைந்துள்ள வேதவ வைத்தீஸ்வரர் கோவில், கைலாசநாதர் கோவிலில் பிரதோஷ வழிபாடு நடைபெற்றது.

கீழ்பென்னாத்தூரில் உள்ள மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் சனி பிரதோஷ வழிபாடு நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். வேட்டவலம் தர்மசம்வர்த்தினி உடனுறை அகத்தீஸ்வரர் கோவிலில் பிரதோஷ சிறப்பு வழிபாடு நடந்தது. ராஜன்தாங்கல் ராஜமங்களாம்பிகை சமேத ராஜலிங்கேஸ்வரர் கோவிலில் நந்திக்கு சிறப்பு அபிஷேகம், சிறப்பு அலங்காரம் செய்து சிறப்பு பூஜை நடந்தது. ஆவூரில் உள்ள ஆனந்தவல்லி உடனுறை அகத்தீஸ்வரர் கோவிலில் பிரதோஷ வழிபாடு நடைபெற்றது.

கண்ணமங்கலம் ராமநாதீஸ்வரர் கோவிலில் சாமிக்கும் நந்தீஸ்வரருக்கும் சிறப்பு அபிஷேகம் அலங்காரம் தீபாராதணை நடைபெற்றது. கொளத்தூரில் ஏகாம்பரேஸ்வரர் கோவிலில் நந்தி பகவானுக்கு பிரதோஷ வழிபாடு நடைபெற்றது. இதில் திரளாக பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

பெரணமல்லூரை அடுத்த இஞ்சிமேடு பெரியமலையில் உள்ள திருமணி சேறைவுடையார் சிவன் கோவிலில் சனி பிரதோஷ விழா நடந்தது. காலையில் திருமணி சேறைவுடையார் சிவனுக்கும், திருமணி நாயகிக்கும், வள்ளி, தெய்வானை முருகன், விநாயகர், நவக்கிரகங்கள் ஆகிய மூலவர், உற்சவருக்கும் சிவாச்சாரியார் ஆனந்தன் சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்தார். பின்னர் கோவில் வளாகத்தில் உள்ள அதிகார நந்திக்கு சனி பிரதோஷத்தை முன்னிட்டு அருகம்புல் மாலை மற்றும் பூ மாலைகள், பட்டு வேட்டி ஆகியவை அணிவிக்கப்பட்டு கோவில் நிர்வாகி ஐ.ஆர். பெருமாள் ஆன்மிக சொற்பொழிவாற்றினார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர், சேவார்த்திகள் ஆகியோர் செய்திருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்