அணைக்கரை கீழ அணை வழியாக பஸ்கள் இயக்க வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை

அணைக்கரை கீழ அணை வழியாக பஸ்கள் இயக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2018-09-02 22:45 GMT
மீன்சுருட்டி,

அரியலூர் மாவட்டத்தையும், தஞ்சை மாவட்டத்தையும் இணைக்கும் விதமாக தஞ்சை மாவட்டம் அணைக் கரையில் கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் அணைக்கரை கீழ அணை கட்டப்பட்டது. இந்த அணை மூலம் அரியலூர், தஞ்சை, நாகை, கடலூர் ஆகிய மாவட்டங்கள் பாசன வசதி பெறுகின்றது. இந்நிலையில் இந்த ஆண்டு கர்நாடக மாநிலத்தில் காவிரி நீர்பிடிப்பு பகுதியில் கனமழை பெய்தது. இதன் காரணமாக அங்கு உள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் ஆகிய அணைகள் நிரம்பியதால், பாதுகாப்பு நலன் கருதி, மேட்டூர் அணைக்கு தண்ணீர் திறக்கப்பட்டு முழு கொள்ளளவான 120 அடியை எட்டியது. மீண்டும் கர்நாடக மற்றும் கேரளாவில் வரலாறு காணாத மழை பெய்து வெள்ள காடானதால் அங்கிருந்து திறக்கப்படும் உபரி நீரின் அளவு அதிகரித்தது.

அதன்படி, மேட்டூர் அணை இரண்டாவது முறையாக முழு கொள்ளளவை எட்டியது. மேட்டூரில் இருந்து முக்கொம்பு, கல்லணை வழியாக அணைக்கரை கீழஅணைக்கு கடந்த 13-ந்தேதி 87 ஆயிரம் கன அடி நீர் திறக்கப்பட்டது. இதை தொடர்ந்து நீர் வரத்து அதிகரித்து 2.50 லட்சம் கன அடி நீர் திறக்கப்பட்டு கடலுக்கு சென்றது. இதனால் அணைக்கரை கரையோரங்களில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் வெள்ள நீர் புகுந்து பாதிப்பு ஏற்பட்டது.

அணைக்கரை கீழ அணையில் 2.50 லட்சம் கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு கரை புரண்டு ஓடியது. இதனால் அணை பாதுகாப்பு நலன் கருதி ஏற்கனவே கனரக வாகனங்களுக்கு போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. மேலும் அணைக்கரை வழியாக கும்பகோணம், சென்னை, கடலூர், புதுச்சேரி, தஞ்சை, ராஜமன்னார்குடி, புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு நகரங்களுக்கு செல்லும் அனைத்து பஸ்களும் மதனத்தூர், நீலத்தநல்லூர் வழியாக பஸ் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது.

இது குறித்து பொது பணித்துறை அதிகாரிகளிடம் கூறுகையில், பாலம் பாதுகாப்பு கருதி தான் தற்போது தற்காலிகமாக தடை செய்யப்பட்டுள்ளது. இன்னும் ஒரு சில நாட்களில் நீர் வரத்து குறைந்ததும், பழையபடி இதன் வழியாக மீண்டும் பஸ் போக்குவரத்து தொடரும் என்றனர்.

அணைக்கரை கீழ அணையில் நீர் வரத்து குறைந்தும் பஸ் போக்குவரத்து இயக்காததால் பொதுமக்கள் மற்றும் மாணவ-மாணவிகள் பெரும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். மதனத்தூர், நீலத்தநல்லூர் வழியாக செல்லும் பஸ் போக்குவரத்து கூடுதலாக சுமார் 2 மணி நேரம் செல்வதால் குறிப்பிட்ட நேரத்தில் செல்லமுடியாமல் பொதுமக்களும், மாணவ, மாணவிகள் வகுப்புகளுக்கு செல்ல முடியாமல் அவதியடைந்து வந்தனர். மேலும் தற்போது உயர்த்தப்பட்ட பஸ் கட்டணத்தை விட கூடுதலாக பஸ் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. சென்னையில் இருந்து கும்பகோணத்திற்கு கட்டணம் ரூ.280 வசூலிக்கப்பட்டது. ஆனால் தற்போது ரூ.360 வசூலிக்கப்பட்டு வருகிறது.

அணைக்கரை கீழ அணை வழியாக மீண்டும் பஸ் போக்குவரத்து இயக்கினால் மீன்சுருட்டியில் இருந்து கும்பகோணம் செல்ல ரூ.30 மட்டுமே. ஆனால் தற்போது மதனத்தூர் நீலத்தநல்லூர் வழியாக செல்லும் பஸ்கள் ரூ.70 டிக்கெட் வழங்குகின்றனர். இதனால் பணமும், நேரமும் விரையமாகிறது. பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்கள் வகுப்புகளுக்கு குறித்த நேரத்திற்கு செல்ல முடியாமல் போகிறது. உடனடியாக அணைக்கரை கீழ அணை மூலம் பஸ்கள் இயக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்