கள்ளக்காதலனுடன் உல்லாசமாக இருந்த பெண்ணை வெட்டிக் கொன்ற கணவர்

கீதா சமையல் அறையில் இருந்து அரிவாளை எடுத்து வந்து விஜய்யை வெட்ட முயன்றுள்ளார்.;

Update:2025-10-03 08:30 IST

பெங்களூரு,

கர்நாடக மாநிலம் மைசூரு மாவட்டம் உன்சூர் தாலுகா மூக்கனஹள்ளியை சேர்ந்தவர் விஜய் (வயது 35). இவரது மனைவி கீதா (28). இவருக்கு அதே பகுதியை சேர்ந்த திலீப் (32) என்பவருடன் கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளது. இதனால் கீதாவும், திலீப்பும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசம் அனுபவித்து வந்துள்ளனர். சில சமயங்களில் கீதா, தனது கணவர் இல்லாத போது வீட்டுக்கே காதலனை வரவழைத்து உல்லாசமாக இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

சமீபத்தில் இந்த கள்ளக்காதல் விவகாரம் விஜய்க்கு தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், மனைவி கீதாவை கண்டித்துள்ளார். மேலும் கள்ளக்காதலை கைவிடும்படி அறிவுறுத்தியுள்ளார். இருப்பினும் கீதா கள்ளக்காதலை கைவிடாமல் தொடர்ந்துள்ளார். இந்த நிலையில் கடந்த 30-ந்தேதி இரவு விஜய் வெளியே சென்றுள்ளார். இதுபற்றி கீதா, தனது காதலன் திலீப்பிடம் கூறியுள்ளார்.

இதையடுத்து அவர் கீதாவின் வீட்டுக்கு சென்று உல்லாசமாக இருந்துள்ளார். அந்த சமயத்தில் வெளியே சென்றிருந்த விஜய் திடீரென்று வீட்டுக்கு வந்துள்ளார். வீட்டில் காதலனுடன் கீதா உல்லாசமாக இருப்பதை பார்த்து அவர் ஆத்திரமடைந்தார். நான் பல முறை கூறியும் கள்ளக்காதலை கைவிடவில்லை என கூறி மனைவி கீதாவை அவர் தாக்கியுள்ளார். மேலும் திலீப்பையும் அவர் தாக்கியுள்ளார்.

அப்போது கீதா சமையல் அறையில் இருந்து அரிவாளை எடுத்து வந்து விஜய்யை வெட்ட முயன்றுள்ளார். இதில் ஆத்திரத்தின் உச்சத்திற்கு சென்ற விஜய், அரிவாளை பிடுங்கி கீதாவை சரமாரியாக வெட்டினார். இதில் அவர் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்து துடிதுடித்து இறந்தார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த காதலன் திலீப் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார். இருப்பினும் அவரை விடாமல் துரத்திச் சென்ற விஜய், மரத்தடியால் திலீப்பின் காலில் சரமாரியாக தாக்கினார். இதில் அவரது ஒரு கால் முறிந்தது.

இதையடுத்து அப்பகுதி மக்கள் விரைந்து சென்று விஜயை பிடித்து அப்புறப்படுத்தினர். மேலும் பலத்த காயமடைந்த திலீப்பை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த கொலை சம்பவம் பற்றி தகவல் அறிந்ததும் உன்சூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் கொலையான கீதாவின் உடலை மீட்டு உன்சூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர்.

போலீஸ் விசாரணையில், கள்ளக்காதலை கைவிடாததாலும், வீட்டுக்கே அழைத்து காதலனுடன் உல்லாசமாக இருந்ததாலும் மனைவி கீதாவை அவரது கணவர் விஜய் வெட்டிக் கொன்றதும், கள்ளக்காதலனின் காலை மரத்தடியால் அடித்து உடைத்ததும் தெரியவந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கணவர் விஜயை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்