காஷ்மீர் காவல் நிலைய வெடிப்பு சம்பவம்; பலியான 9 பேரின் உடல்களுக்கு அரசு சார்பில் இறுதி மரியாதை
உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.10 லட்சம் அறிவிக்கப்பட்டுள்ளது.;
ஸ்ரீநகர்,
தலைநகர் டெல்லியில் செங்கோட்டை அருகே கடந்த 10ம் தேதி கார் குண்டுவெடிப்பு தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த பயங்கரவாத தாக்குதலில் 13 பேர் உயிரிழந்தனர். இந்த கார் குண்டு வெடிப்பு தொடர்பாக 8 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதனிடையே இந்த தாக்குதல் தொடர்பாக பரிதாபாத்தில் போலீசார் நடத்திய சோதனையில் 360 கிலோ வெடிமருந்து கண்டுபிடிக்கப்பட்டது. இதுதொடர்பாக காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தை சேர்ந்த முகமில் ஷகீல் கனியா என்ற நபரை போலீசார் கைது செய்தனர்.
இந்த வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட வெடிபொருட்கள், ஜம்மு காஷ்மீரின் நவ்காம் போலீஸ் நிலையத்தில் வைக்கப்பட்டிருந்தன. இந்த சூழலில் நேற்று இரவு வெடிபொருட்களை ஆய்வு செய்துக் கொண்டிருந்தபோது திடீரென அந்த வெடிபொருட்கள் வெடித்ததால் தடயவியல் குழுவினர், போலீசார் என 9 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
மேலும் இந்த சம்பவத்தில் 27-க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். வெடிபொருட்களை கையாண்டபோது தவறுதலாக ஏற்பட்ட விபத்தின் காரணமாகவே இந்த வெடிப்பு சம்பவம் நிகழ்ந்ததாக முதற்கட்ட தகவல் வெளியானது. தொடர்ந்து இது குறித்து தீவிர விசாரணை நடத்த ஜம்மு காஷ்மீர் துணை நிலை கவர்னர் மனோஜ் சின்ஹா உத்தரவிட்டுள்ளார்.
இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.10 லட்சம், மற்றும் படுகாயமடைந்தவர்களுக்கு ரூ.1 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என ஜம்மு காஷ்மீர் முதல் மந்திரி உமர் அப்துல்லா அறிவித்துள்ளார். இந்நிலையில், காவல் நிலைய வெடிப்பு சம்பவத்தில் உயிரிழந்த 9 பேரின் உடல்களுக்கு அரசு சார்பில் இறுதி மரியாதை செலுத்தப்பட்டது. பின்னர் உறவினர்களிடம் உடல்கள் ஒப்படைக்கப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது.