வந்தே மாதரம் பாடல் விவாதம்: மக்களவையில் பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார்
வந்தே மாதரம் பாடலின் 150-வது ஆண்டு விழா குறித்த விவாதத்தை பிரதமர் மோடி மக்களவையில் இன்று தொடங்கி வைக்கிறார்.;
புதுடெல்லி,
இந்தியா ஆங்கிலேயரிடம் அடிமைப்பட்டு இருந்த காலத்தில் நாட்டு மக்களிடையே தேசப்பற்றை தூண்டும் விதத்தில் வங்காளத்தைச் சேர்ந்த சுதந்திரப் போராட்ட வீரர் பங்கிம் சந்திர சட்டர்ஜி, வந்தே மாதரம் பாடலை இயற்றினார். 1870-களில் இயற்றப்பட்ட இந்த பாடலுக்கு ஜாது நாத் பட்டாச்சார்யா இசை அமைத்தார்.
இது 1905-ம் ஆண்டு இந்திய தேசிய காங்கிரசால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. பின்னர் நாடு சுதந்திரம் அடைந்து குடியரசு நாடாக ஆனதற்கு 2 நாட்களுக்கு முன்பு அதாவது 1950-ம் ஆண்டு ஜனவரி 24-ந் தேதி தேசிய பாடலாக இது அங்கீகரிக்கப்பட்டது.
இந்த பாடலின் 150-வது ஆண்டு விழா கடந்த மாதம் 7-ந் தேதி கொண்டாடப்பட்டது. டெல்லி இந்திராகாந்தி விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்ற விழாவில் பிரதமர் மோடி, வந்தே மாதரம் பற்றிய சிறப்பு நாணயம் மற்றும் தபால் தலையை வெளியிட்டு பேசினார். அவரது உரையில் காங்கிரஸ் மீது குற்றச்சாட்டு இருந்தது.
இந்தநிலையில் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் வந்தே மாதரம் பாடலின் 150-வது ஆண்டு விழா குறித்த விவாதம் நடைபெற இருக்கிறது.
"தேசியப் பாடலான வந்தே மாதரத்தின் 150-வது ஆண்டு விழா குறித்த விவாதம்" என்ற தலைப்பில் பட்டியலிடப்பட்டு இருக்கும் இந்த விவாதத்தை பிரதமர் மோடி இன்று மக்களவையில் தொடங்கி வைக்கிறார்.
பிரதமரை தொடர்ந்து பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் இந்த விவாதத்தில் உரையாற்றுகிறார். அதன்பிறகு பிற கட்சிகளின் தலைவர்கள் பேசுகிறார்கள். மக்களவையில் எதிர்க்கட்சி துணைத்தலைவர் கவுரவ் கோகாய் மற்றும் பிரியங்கா காந்தி ஆகியோருக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டு இருக்கிறது.
இதுபோல இந்த விவாதம் மாநிலங்களவையில் நாளை (செவ்வாய்க்கிழமை) தொடங்கி வைக்கப்படுகிறது. மாநிலங்களவையில் உள்துறை மந்திரி அமித்ஷா இதனை தொடங்கி வைக்கிறார். அங்கு சுகாதாரத்துறை மந்திரியும், அவை முன்னவருமான ஜே.பி.நட்டா 2- வது பேச்சாளராக பங்கேற்கிறார்.
இந்த விவாதத்தில் வந்தே மாதரம் பாடல் பற்றி இதுவரை அறிந்திராத பல விஷயங்கள் முன்வைக்கப்படும் என்றும், இளைஞர்கள் அறிந்து கொள்ளும் பொருட்டு பல்வேறு முக்கிய தகவல்களை ஆளுங்கட்சியினர் தெரிவிப்பார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே கடந்த மாதம் நடைபெற்ற விழாவில் பிரதமர் மோடி இந்த பாடலின் சில வரிகளை 1937-ம் ஆண்டு நீக்கி காங்கிரஸ் கட்சி பிரிவினைவாதத்துக்கு வித்திட்டதாக கூறியிருந்தார். இது அப்போது எதிர்க்கட்சியினரிடம் கடும் விமர்சனங்களை பெற்றது.
இந்தநிலையில் 2 அவைகளிலும் அது குறித்த விவாதம் நடைபெற இருக்கிறது. இதனால் அவையில் அனல் பறக்கும். இந்த விவாதத்துக்கான காலம் 10 மணி நேரம் என ஒதுக்கப்பட்டுள்ளது.
மக்களவையில் இந்த விவாதத்தை தொடர்ந்து, நாளை தேர்தல் சீர்திருத்தங்கள் தொடர்பான விவாதம் எடுத்துக்கொள்ளப்படுகிறது. வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் அடங்கிய தேர்தல் சீர்திருத்தங்கள் தொடர்பான இந்த விவாதம் நாளையும், நாளை, மறுநாளும் நடைபெறும். இதுபோல மாநிலங்களவையில் தேர்தல் சீர்திருத்தம் தொடர்பான விவாதம் 10 மற்றும் 11 -ந் தேதிகளில் நடக்கிறது.
இந்த 2 விவாதங்களும் ஆளும் கட்சியினருக்கும், எதிர்க்கட்சியினருக்கும் இடையே மிகப்பெரிய கருத்துப்போராக இருக்கும் என்பதால் அவைகளில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது.