மின்துறை ஊழியர்கள் உண்ணாவிரதம்
காரைக்காலில் காலி பணியிடங்களை உடனே நிரப்பக்கோரி காரைக்கால் மின்துறை ஊழியர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.;
காரைக்கால்
காலி பணியிடங்களை உடனே நிரப்பக்கோரி காரைக்கால் மின்துறை ஊழியர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
உண்ணாவிரதம்
காரைக்கால் மாவட்ட மின்துறையில் காலியாக உள்ள அனைத்து பணியிடங்களையும் உடனே நிரப்பவேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகளை மின்துறை ஊழியர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இதனை தொடர்ந்து காரைக்கால் மாவட்ட மின்துறை அலுவலக வாயிலில் இன்று ஊழியர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த போராட்டத்துக்கு மின்துறை தனியார் மய எதிர்ப்பு போராட்டக்குழு பொதுச்செயலாளர் பழனிவேல் தலைமை தாங்கினார். தலைவர் வேல்மயில் முன்னிலை வகித்தார். போராட்டத்தில் 100-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் கலந்துகொண்டனர்.
பதவி உயர்வு வழங்கவேண்டும்
காரைக்கால் மாவட்ட மின்துறையில் காலியாக உள்ள அனைத்து பணியிடங்களையும் உடனே நிரப்பவேண்டும், அனைத்து பதவி உயர்வுகளையும் விரைவில் வழங்கவேண்டும், மின்துறையை தனியார் மயமாக்கும் மத்திய, மாநில அரசுகளின் கொள்கை முடிவை உடனே கைவிடவேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகள் இந்த போராட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.
பணி நேரத்திற்கு அதிகமான வேலை செய்ததற்கான ஓ.டி. தொகையை வருகிற 15-ந் தேதிக்குள் வழங்காவிட்டால், வேலை நேரத்துக்கு மேல் கூடுதலாக பணிசெய்ய மாட்டார்கள் என போராட்டத்தில் அறிவிக்கப்பட்டது. இந்த உண்ணாவிரத போராட்டம் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை நடந்தது. போராட்டத்தை தி.மு.க. வணிகர் சங்க தலைவர் கந்தாஸ் சிவலிங்கராஜா பழச்சாறு கொடுத்து முடித்து வைத்தார். மின் ஊழியர்களின் போராட்டம் காரணமாக மின் துறை பணிகள் வெகுவாக பாதிக்கப்பட்டது.