மகளை மிரட்ட தற்கொலை நாடகமாடிய ஜிப்மர் பெண் ஊழியர் உடல் கருகி சாவு
புதுவையில் நன்றாக படிக்குமாறு மகளை மிரட்டிய போது அணைக்காமல் வீசி எறிந்த தீக்குச்சி தீயால் உடல் கருகி ஜிப்மர் பெண் ஊழியர் பலியானார்.;
புதுச்சேரி
நன்றாக படிக்குமாறு மகளை மிரட்டிய போது அணைக்காமல் வீசி எறிந்த தீக்குச்சி தீயால் உடல் கருகி ஜிப்மர் பெண் ஊழியர் பலியானார்.
ஜிப்மர் ஊழியர்
புதுச்சேரி நெல்லித்தோப்பு 3-வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் தன்ராஜ். சுகாதாரத்துறை ஊழியர். இவரது மனைவி சித்ரகலா (வயது 53). இவர், ஜிப்மர் மருத்துவமனையில் பல்நோக்கு ஊழியராக பணி செய்து வந்தார். இவர்களுக்கு சாம்ராஜ் என்ற மகனும், மெர்சி என்ற மகளும் உள்ளனர். ஒரு பள்ளியில் மெர்சி பிளஸ்-2 படித்து வந்தார்.
மருத்துவமனையில் பயன் படுத்தும் ஸ்பிரிட்டை (எளிதில் தீப்பிடிக்ககூடியது) கொண்டு வந்து வீட்டு தரைகளை சித்ரகலா சுத்தம் செய்வது வழக்கம். சம்பவத்தன்று சித்ரகலா வீட்டை சுத்தம் செய்து கொண்டு இருந்தார்.
அப்போது அங்கு இருந்த தனது மகள் மெர்சியிடம் நன்றாக படிக்க வேண்டும். நான் சொல்வதை கேட்க வேண்டும். இல்லையென்றால் ஸ்பிரிட் ஊற்றி தீ வைத்து தற்கொலை செய்து விடுவேன். உங்களால் தனியாக வாழ முடியாது என்று நடித்தபடி தீக்குச்சியை உரசி மகளை மிரட்டியுள்ளார்.
உடல் கருகி சாவு
இதனால் அதிர்ச்சியடைந்த மெர்சி தனது தாயார் அருகில் ஓடி சென்று, 'நான் இனிமேல் நன்றாக படிப்பேன், ஒழுங்காக நடப்பேன், நீங்கள் சொல்வதை கேட்கிறேன்' என்று கூறி கதறியுள்ளார். உடனே அவர் தீக்குச்சியில் எரிந்த தீயை அணைக்காமல் தூக்கி வீசினார். இதனால் தீ முழுவதும் அணையாமல் இருந்த நிலையில் தரையில் பரவிக் கிடந்த ஸ்பிரிட்டில் தீக்குச்சி விழுந்ததால் குபீர் என தீப்பிடித்தது.
இதில் எதிர்பாராதவிதமாக சித்ரகலா உடையில் தீப்பிடித்து உடல் முழுவதும் பரவியது. வலி தாங்க முடியாமல் அவரும், இதனை பார்த்த மகளும் கூச்சலிட்டனர். அப்போது அங்கு வந்த தன்ராஜ் தீயை அணைத்து உடல் கருகிய சித்ரகலாவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தார். பின்னர் மேல் சிகிச்சைக்காக ஜிப்மர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும் பலனின்றி சித்ரகலா இன்று பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து உருளையன்பேட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சந்திரசேகர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
மகளை மிரட்டுவதற்காக தீவைத்து தற்கொலை செய்து கொள்வதாக நாடகமாடிய ஜிப்மர் பெண் ஊழியர் பலியான சம்பவம் அப்பகுதியில் பரிதாபத்தை ஏற்படுத் தியது.