‘டிஜிட்டல் கைது' மோசடியில் சிக்கி ரூ.13.5 லட்சத்தை இழந்த ஓய்வு பெற்ற தபால் அதிகாரி
மர்ம நபர்கள் கூறியபடி 3 வங்கி கணக்குகளுக்கு 7 தவணைகளாக ரூ.13 லட்சத்து 50 ஆயிரம் அனுப்பி உள்ளார்.;
கோப்புப்படம்
திருவாரூர் நகராட்சி ஏ.டி. பன்னீர்செல்வம் நகரை சேர்ந்தவர் குஞ்சிதபாதம் (80 வயது). ஓய்வு பெற்ற தபால் மாஸ்டர். இவருக்கு இரு வேறு ‘வாட்ஸ்அப்’ எண்களில் இருந்து வீடியோ அழைப்பு வந்துள்ளது. அதில் பேசிய மர்ம நபர்கள், உங்கள் முகவரிக்கு சட்ட விரோதமான முறையில் கடத்தல் பொருள் பார்சல் வந்துள்ளதால், ‘டிஜிட்டல் கைது’ செய்திருப்பதாக கூறி உள்ளனர்.
மேலும் அவரிடம் பணம் கொடுக்கவில்லை என்றால் இந்த வழக்கு சி.பி.ஐ.க்கு மாற்றப்படும் என்றும் கூறி மர்ம நபர்கள் மிரட்டும் வகையில் பேசி உள்ளனர். இதை கேட்டு பதற்றம் அடைந்த குஞ்சிதபாதம் என்ன செய்வது என்று அறியாமல் மர்ம நபர்கள் கூறியபடி 3 வங்கி கணக்குகளுக்கு 7 தவணைகளாக ரூ.13 லட்சத்து 50 ஆயிரம் அனுப்பி உள்ளார். இறுதியில் தான் ‘டிஜிட்டல் கைது’ என்ற முறையில் மோசடியில் சிக்கி ஏமாற்றப்பட்டிருப்பது தெரியவந்தது.
இதையடுத்து அவர் திருவாரூர் சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து குஞ்சிதபாதம் பணம் அனுப்பிய 3 வங்கி கணக்குகளில் இருந்த ரூ.6 ஆயிரத்து 205-ஐ முடக்கி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.