இன்ஸ்டாகிராமில் போலி ஐ.டி.களை உருவாக்கி 2 சிறுமிகளை பலாத்காரம் செய்த வாலிபர்
இன்ஸ்டாகிராமில் பீட்டர் என்ற பெயரில் பழக்கமான வாலிபரை காதலித்தேன் என்று சிறுமி கூறினார்.;
குமரி,
குமரி மாவட்டம் முட்டம் பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமி குடும்ப வறுமையால் படிப்பை கைவிட்டு அந்த பகுதியில் உள்ள ஒரு கடையில் வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த நவம்பர் மாதம் 10-ந் தேதி கடைக்கு செல்வதாக கூறி சென்ற அந்த சிறுமி மாயமானார். பிறகு வீடு திரும்பிய நிலையில் அவர் தெரிவித்த தகவல் குடும்பத்தினரை அதிர்ச்சி அடைய செய்தது.
இன்ஸ்டாகிராமில் பீட்டர் என்ற பெயரில் பழக்கமான வாலிபரை காதலித்தேன். அவர் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி மோட்டார் சைக்கிளில் கன்னியாகுமரிக்கு அழைத்துச் சென்று விடுதியில் அடைத்து வைத்து பலாத்காரம் செய்தார். பின்னர் மோதிரம், கம்மலை வாங்கி விட்டு அம்மாண்டிவிளை பகுதியில் இறக்கி விட்டு நைசாக அங்கிருந்து சென்று விட்டார்.
அதன்பிறகு தான், காதலன் தன்னை ஏமாற்றி விட்டதை உணர்ந்த நிலையில் நான் வீடு திரும்பினேன் என்று கூறியுள்ளார். அதே சமயத்தில் காதலனின் முழுமையான ஊர் விவரம் தெரியாது எனவும் தெரிவித்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் இதுகுறித்து குளச்சல் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து இன்ஸ்டாகிராம் காதலனை செல்போன் எண் மூலம் கண்டுபிடிக்க முயன்றனர். அதில் முதலில் முன்னேற்றம் இல்லை.
இதுதவிர போலியான ஆதார் எண் கொடுத்து கன்னியாகுமரி விடுதியில் அந்த காதலன், சிறுமியுடன் தங்கியிருந்தது தெரியவந்தது. பின்னர் செல்போனின் ஐ.எம்.இ. நம்பர் அடிப்படையில் ஆய்வு செய்த போது, அந்த செல்போன் வேறு புதிய எண்ணுடன் தேனி மாவட்டம் கூடலூரில் உள்ள வீட்டில் பயன்பாட்டில் இருப்பது தெரியவந்தது.
உடனே தேனி மாவட்டம் கூடலூர் விரைந்த போலீசார் செல்போன் பயன்பாட்டில் இருந்த வீட்டிற்கு சென்றனர். அங்கு ஒரு பெண் இருந்தார். அந்த பெண்ணிடம் நடத்திய விசாரணையில், மேலும் ஒரு சிறுமியுடன் போலி இன்ஸ்டாகிராம் காதலன் அந்த வீட்டில் தங்கியிருந்த அதிர்ச்சி தகவல் வெளியானது.
அதாவது போலி இன்ஸ்டாகிராம் காதலன், கேரள மாநிலம் இடுக்கி கட்டப்பனை பகுதியை சேர்ந்த பினிப் என்பவரது மகன் பினு (வயது 24) என்பதும், டீ மாஸ்டரான இவர் திருவிழா கடைகளுக்கு சென்று குலுக்கி சர்பத் வியாபாரம் செய்தும் வந்துள்ளார்.
குமரியில் சிறுமியை ஏமாற்றி பலாத்காரம் செய்த பினு, பின்னர் மேலும் ஒரு சிறுமியுடன் கூடலூர் வீட்டில் தங்கியுள்ளார். இரவு தங்கியவர் காலையில் சொந்த ஊரான கேரளா மாநிலம் இடுக்கி அருகே உள்ள கட்டபனை கிராமத்திற்கு செல்வதாக கூறி சிறுமியுடன் சென்று விட்டதாகவும் அந்த பெண் தெரிவித்துள்ளார். இதுதவிர அந்த பெண், பினுவின் புகைப்படத்தையும் போலீசாரிடம் வழங்கியுள்ளார்.
அதன்பிறகு போலீசார் அந்த புகைப்படத்துடன் கேரள மாநிலம் கட்டப்பனை கிராமத்திற்கு விரைந்தனர். வினுவின் புகைப்படத்தை காண்பித்து சுற்றுலா விடுதி உரிமையாளர்கள் மூலம் விசாரித்தனர். இதில் ஒரு விடுதியில் சிறுமியுடன் பினு தங்கியிருப்பதை கண்டுபிடித்தனர். அந்த விடுதியை சுற்றி வளைத்து பினுவை மடக்கினர்.
மீட்கப்பட்ட சிறுமியின் சொந்த ஊரும் கோட்டார் ஆகும். இந்த சிறுமியையும் போலி இன்ஸ்டாகிராம் மூலம் காதலித்து பலாத்காரம் செய்துள்ளார். பிறகு போக்சோ வழக்கில் கைதான நிலையில் பினு மீண்டும் ஜாமீனில் வெளியே வந்தார். வந்த இடத்தில் மீண்டும் அந்த சிறுமியிடம் பழக்கத்தை தொடர்புபடுத்தி சொந்த ஊருக்கு அழைத்துச் சென்றுள்ளார்.
இவ்வாறு 2 சிறுமிகளை பலாத்காரம் செய்து ஏமாற்றிய பினு போலியாக 10-க்கும் மேற்பட்ட போலி இன்ஸ்டாகிராம் ஐ.டி.யை உருவாக்கி ஏராளமான சிறுமிகளை காதல் வலையில் வீழ்த்தியதாகவும் கூறப்படுகிறது. பின்னர் பினுவை கைது செய்து நாகர்கோவில் போக்சோ கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்ததோடு அவரை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர். சிறுமியை மருத்துவ பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.