ரீல்ஸ் எடுத்தபடி பைக்கில் சென்ற இளைஞர்களால் விபத்து - 5 பேர் காயம்

ரீல்ஸ் வீடியோ எடுத்தபடி வாகனத்தை ஓட்டிய 2 பேருக்கு லேசான காயங்களும், மற்ற 3 பேருக்கு பலத்த காயங்களும் ஏற்பட்டுள்ளன.;

Update:2025-12-07 18:34 IST

சென்னை,

சென்னை மாங்காடு அருகே வண்டலூர்-மீஞ்சூர் வெளிவட்ட சாலையில் இளைஞர்கள் சிலர் செல்போனில் ரீல்ஸ் வீடியோ எடுத்தபடி இருசக்கர வாகனத்தில் சென்று விபத்தை ஏற்படுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூரைச் சேர்ந்த சசி மற்றும் தனுஷ் ஆகிய இருவரும் விலை உயர்ந்த ஹெல்மெட் வாங்குவதற்காக இன்று மாலை பைக்கில் வண்டலூர்-மீஞ்சூர் வெளிவட்ட சாலையில் அதிவேகமாக சென்றுகொண்டிருந்தனர்.

மாங்காடு அடுத்த மலையம்பாக்கம் அருகே சென்று கொண்டிருந்தபோது தங்கள் செல்போனில் ரீல்ஸ் எடுத்தபடி சென்றுள்ளனர். அப்போது முன்னால் சென்ற பைக்கின் மீது இவர்களின் வாகனம் மோதியதில், 3 பேரும் நிலை தடுமாறி கீழே விழுந்தனர். அங்கே அருகில் நின்று கொண்டிருந்த ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் உதவி செய்வதற்காக அருகில் வந்துள்ளார். இதற்கிடையில் மற்றொரு பைக் இவர்கள் மீது மோதியுள்ளது.

இவ்வாறு அடுத்தடுத்து வாகனங்கள் மோதி விபத்து ஏற்பட்டதில் 5 பேர் படுகாயமடைந்தனர். இதையடுத்து காயமடைந்த 5 பேரும் பூந்தமல்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இதில் ரீல்ஸ் வீடியோ எடுத்தபடி வாகனத்தை ஓட்டிய 2 பேருக்கு லேசான காயங்களும், மற்ற 3 பேருக்கு பலத்த காயங்களும் ஏற்பட்டுள்ளன. அவர்கள் மேல்சிகிச்சைக்காக கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் குறித்து ஆவடி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Full View
Tags:    

மேலும் செய்திகள்