சிம்பொனி இசை படைத்த இளையராஜாவுக்கு அன்புமணி ராமதாஸ் வாழ்த்து
சிம்பொனி இசை படைத்த இளையராஜாவுக்கு அன்புமணி ராமதாஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.;
சென்னை,
தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளரான இளையராஜா, சினிமாவில் 1,500 படங்களுக்கு மேல் இசையமைத்து சாதனை ராஜாவாக திகழ்ந்து வருகிறார். இசைக்கு அவர் அளித்த பங்களிப்பை போற்றும் வகையில் பல்வேறு விருதுகளை அளித்த மத்திய அரசு மாநிலங்களவை உறுப்பினராகவும் அவரை நியமனம் செய்துள்ளது.
இந்த நிலையில், லண்டனில் உள்ள உலக புகழ்பெற்ற ஈவண்டின் அப்பல்லோ அரங்கத்தில் நேற்று முன்தினம் நள்ளிரவு தனது சிம்பொனியை இளையராஜா அரங்கேற்றினார். இதையொட்டி திரையுலகினரும், ரசிகர்களும் அவருக்கு சமூக வலைதளங்களில் வாழ்த்துகளை தெரிவித்து வருகிறார்கள்.
இந்த நிலையில், சிம்பொனி இசை படைத்த இளையராஜாவுக்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில்,
இசையுலக சாதனைகளின் உச்சமாக லண்டனில் வேலியண்ட் என்ற தலைப்பில் சிம்பொனி இசையை இசைக்கடவுள் இளையராஜா அரங்கேற்றியிருப்பது மிகுந்த மகிழ்ச்சியும், பெருமையும் அளிக்கிறது. இதற்காக அவருக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இளையராஜாவின் இசை வரலாற்றில் உச்சங்களுக்கு வரம்பு எதுவும் கிடையாது. ஒவ்வொரு முறை உச்சத்தை அடையும் போது அடுத்த இலக்கை நோக்கி வெற்றிகரமாக முன்னேற்றுவது தான் அவரது இயல்பாக இருந்திருக்கிறது. இன்றைய நிலையில் சிம்பொனி சாதனை அவரது உச்சமாக இருந்தாலும் இனிவரும் காலங்களில் அவர் மேலும் பல உச்சங்களை அடைவார். அதற்காக அவருக்கு வாழ்த்துகள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.