சிறப்பாக பணியாற்றிய சீருடை பணியாளர்களுக்கு அண்ணா பதக்கங்கள் வழங்க முதல்-அமைச்சர் ஆணை
ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 15-ம் நாள் அண்ணாவின் பிறந்த நாளன்று பதக்கங்கள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.;
சென்னை,
தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:-
தமிழ் நாட்டில் காவல் துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை, சிறைகள் மற்றும் சீர்திருத்த பணிகள் துறை, ஊர்க்காவல் படை, விரல்ரேகைப் பிரிவு மற்றும் தடய அறிவியல் துறைகளில் சிறப்பாக பணியாற்றிய அலுவலர்கள் மற்றும் பணியாளர்களை அங்கீகரிக்கும் வகையிலும், பணியில் ஈடுபாடு மற்றும் அர்ப்பணிப்புடன் பணிபுரிந்ததை பாராட்டும் வகையிலும், ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 15-ம் நாள் பேரறிஞர் அண்ணாவின் பிறந்த நாளன்று தமிழக முதல்-அமைச்சரின் பதக்கங்கள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.
இந்த ஆண்டு, காவல் துறையில் தலைமைக்காவலர் முதல் காவல் கண்காணிப்பாளர் வரையிலான 150 பணியாளர்கள் மற்றும் அலுவலர்களுக்கும், தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறையில் தீயணைப்பு வீரர் முதல் துணை இயக்குநர் வரையிலான 22 பணியாளர்கள் மற்றும் அலுவலர்களுக்கும், சிறைகள் மற்றும் சீர்திருத்த பணிகள் துறையில் முதல்நிலை சிறைக்காவலர் முதல் உதவி சிறை அலுவலர் வரையிலான 10 பணியாளர்கள் மற்றும் அலுவலர்களுக்கும், ஊர்க்காவல் படையில் ஊர்க்காவல் படைவீரர் முதல் படைத்தளபதி வரையிலான 5 ஊர்க்காவல்படை அலுவலர்களுக்கும், விரல்ரேகைப் பிரிவில் 2 கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள் மற்றும் 4 தடய அறிவியல் துறை அலுவலர்கள்/ பணியாளர்களுக்கு அவர்களின் மெச்சத்தகுந்த பணியினை அங்கீகரிக்கும் வகையில் “தமிழக முதல்-அமைச்சரின் அண்ணா பதக்கங்கள்” வழங்கிட தமிழ்நாடு முதல்-அமைச்சர் ஆணையிட்டுள்ளார்கள்.
மேலும், சு.மயில்ராஜு உதவி மாவட்ட அலுவலர், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை, திண்டுக்கல் மாவட்டம் மற்றும் அ.புனிதராஜு, முன்னணி தீயணைப்போர்-6610 ஆகிய இருவரும், கடந்த 12.12.2024 அன்று திண்டுக்கல், திருச்சி சாலையில் உள்ள சிட்டி மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கிய 32 நோயாளிகளை, சவாலான மற்றும் உயிருக்கு ஆபத்தான சூழ்நிலையிலும் மிகுந்த ஈடுபாடு மற்றும் அர்ப்பணிப்புடன் பணிபுரிந்து, பாதுகாப்பாக மீட்டு அருகிலுள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், கடந்த 12.05.2025 அன்று மதுரையில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் திருவிழாவின் போது எதிர்பாராதவிதமாக ஆற்றில் மூழ்கிய ஒரு 17 வயது சிறுவனை, பாதுகாப்பு பணியில் இருந்த மா.இராஜசேகர், தீயணைப்போர்-11066, சோழவந்தான் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலையம், மதுரை மாவட்டம், தன் உயிரையும் பொருட்படுத்தாமல், ஆற்றில் குதித்து சிறுவனை மீட்டு, முதலுதவி செய்து, சோழவந்தான் அரசு மருத்துவமனைக்கு இரு சக்கர வாகனத்தில் அழைத்து சென்று சிறுவனின் உயிரை காப்பாற்றினார். இவர்களின் துணிச்சல் மற்றும் அர்ப்பணிப்பு செயலை பாராட்டி, இம்மூவருக்கும் “தமிழக முதல்-அமைச்சரின் தீயணைப்பு பணிக்கான அண்ணா வீரதீர பதக்கம்” வழங்கிட தமிழ்நாடு முதல்-அமைச்சர் ஆணையிட்டுள்ளார்கள்.
மேற்கண்ட பதக்கங்கள் தமிழ்நாடு முதல்-அமைச்சரால் பிறிதொரு விழாவில் வழங்கப்படும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.