கரூர் துயரத்தால் துவண்டுவிட வேண்டாம் - நிர்வாகிகளுக்கு விஜய் ஆறுதல்
துயரத்தில் இருந்து வெளிவர வேண்டிய முயற்சிகளை செய்யுங்கள் என்று விஜய் கூறியுள்ளார்.;
கரூரில் கடந்த மாதம் 27-ந்தேதி த.வெ.க. தலைவர் விஜய் பங்கேற்ற பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். 100-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதைத்தொடர்ந்து கூட்ட நெரிசலுக்கு உண்மையான காரணம் என்ன? என்பதை கண்டறிய தமிழக அரசு ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒருநபர் ஆணையத்தை அமைத்தது. அதன்படி, ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது. கரூர் போலீசாரும் இந்த சம்பவம் தொடர்பாக த.வெ.க. நிர்வாகிகள் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து இருவரை கைது செய்தனர்.
தற்போதைய சூழ்நிலையில் அடுத்தக்கட்ட பிரசாரத்தை மேற்கொள்வது சரியாக இருக்காது எனக்கருதிய விஜய், ஏற்கனவே திட்டமிட்ட பிரசாரத்தை தள்ளி வைத்துள்ளார். இந்த நிலையில் தவெக தலைவர் விஜய், கட்சியின் நிர்வாகிகளை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு கரூர் துயரத்தால் துவண்டுவிட வேண்டாம் என ஆறுதல் கூறியுள்ளார்.
தவெக நிர்வாகிகளை வாட்ஸ்அப் கால் மூலம் நேரடியாக தொடர்பு கொண்டு பேசிய விஜய், "கரூர் துயரத்தால் துவண்டுவிட வேண்டாம். இறந்தவர்களின் குடும்பத்தினரை நான் விரைவில் சந்திக்க வேண்டும். அதற்கான ஏற்பாடுகளை செய்யுங்கள். இதுபோன்ற ஒரு சூழலை சந்திப்போம் என நினைத்துக்கூட பார்த்ததில்லை.
அனைவரும் நம்பிக்கையுடன், புதிய வேகத்துடன் செயல்படுங்கள். துயரத்தில் இருந்து வெளிவர வேண்டிய முயற்சிகளை செய்யுங்கள்" என்று கூறியுள்ளார்.