நீலகிரியில் பொதுமக்களை காட்டு யானை துரத்தியதால் பரபரப்பு

காட்டு யானை துரத்தியதால், மக்கள் அலறியடித்து ஓடி வீடுகளில் தஞ்சம் புகுந்தனர்;

Update:2025-12-09 04:38 IST

நீலகிரி,

கூடலூர் நகராட்சி பகுதியில் காட்டு யானை ஒன்று முகாமிட்டு தினமும் ஒவ்வொரு இடங்களுக்கு இடம்பெயர்ந்து வருகிறது. 27-ம் மைல், கே.கே.நகர், மேல் மற்றும் நடு கூடலூர், கெவிப்பாரா, கோத்தர் வயல், தோட்டமூழா, செம்பாலா உள்ளிட்ட இடங்களில் உலா வந்தது. வீடுகள் அருகே பயிரிடப்படும் வாழை, பாக்கு மரங்கள் மற்றும் பயிர்களை தின்று பழகி விட்டதால் ஊருக்குள் சுற்றி வருகிறது.

வனத்துறையினர் ஓவேலி அல்லது முதுமலை வனப்பகுதிக்குள் விரட்டினாலும், மீண்டும் ஊருக்குள் நுழைந்து விடுகிறது. கடந்த சில நாட்களாக சுற்றுவட்டார பகுதிகளில் உலா வந்த காட்டு யானை, நேற்று முன்தினம் இரவு 9.50 மணியளவில் மேல் கூடலூர் ஓ.வி.எச். சாலையில் திடீரென நடந்து வந்தது. இதை கண்ட பொதுமக்கள் வீடுகளுக்குள் ஓடினர். மேலும் வாகன ஓட்டிகள் காட்டு யானை வருவதை கண்டு வந்த வழியாக திரும்பிச் சென்றனர்.

பின்னர் காட்டு யானை தனியார் எஸ்டேட்டுக்குள் நுழைந்தது. ஆனால், மறுபுறம் செல்வதற்கு வழி இல்லாததால் சிறிது நேரத்தில் காட்டு யானை வந்த வழியாக திரும்பி வந்தது. அப்போது பொதுமக்கள் சாலையில் நிற்பதை கண்ட காட்டு யானை, திடீரென பிளிறியவாறு துரத்தியது. இதனால் பொதுமக்கள் அலறி அடித்தபடி ஓடி தங்களது வீடுகளுக்குள் தஞ்சம் புகுந்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.பின்னர் காட்டு யானை அங்கிருந்து சென்றது. இதுகுறித்து பொதுமக்கள் கூறும்போது, காட்டு யானை சர்வ சாதாரணமாக ஊருக்குள் வருவது தொடர் கதையாக இருந்து வருகிறது. இதை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும் அல்லது முதுமலைக்கு பிடித்துச் செல்ல வேண்டும் என கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. அசம்பாவிதங்கள் ஏற்படுவதற்கு முன்பு வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

 

Tags:    

மேலும் செய்திகள்