சென்னையில் கனமழை - விமான சேவைகள் பாதிப்பு

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் திடீரென பெய்த கனமழையால் சென்னை விமான நிலையத்தில் விமான சேவைகள் பாதிக்கப்பட்டது.;

Update:2025-10-05 17:43 IST

சென்னை,

தமிழகத்தில் கடந்த சில தினங்களாகவே பல்வேறு இடங்களில் கன மழை பெய்து வருகிறது. இந்தநிலையில், சென்னையில் காலை முதல் வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில், பிற்பகலுக்கு பிறகு பல்வேறு இடங்களில் சூறைகாற்றுடன் கனமழை கொட்டியது.

சென்டிரல், எழும்பூர், சைதாப்பேட்டை, தாம்பரம், குரோம்பேட்டை, பல்லாவரம், மீனம்பாக்கம், திரிசூலம், நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம், ஈக்காட்டுதாங்கல், வடபழனி, கீழ்ப்பாக்கம், ராயப்பேட்டை, எழும்பூர், அடையாறு, மயிலாப்பூர், உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பதிவாகியுள்ளது. சில இடங்களில் மழை சற்று தணிந்தாலும், மீண்டும் சின்ன இடைவெளியில் பெய்தது. இதனால் நகரம் முழுவதும் ஈரப்பதம் அதிகரித்தது.

திடீர் கனமழை காரணமாக, சில முக்கிய சாலைகள் நீரில் மூழ்கின. நுங்கம்பாக்கம் ஹை ரோடு, அண்ணாசாலை, மவுண்ட் ரோடு, மற்றும் வடபழனி சாலை பகுதிகளில் மழைநீர் தேங்கியதால், வாகன ஓட்டிகள் கடும் சிரமத்தை சந்தித்தனர். இருசக்கர வாகன ஓட்டிகள் நீர் நிரம்பிய சாலைகளில் வாகனங்களை இயக்க முடியாமல், பல இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

மேலும், சில குடியிருப்பு பகுதிகளில் மின்தடை ஏற்பட்டது. குறிப்பாக கீழ்ப்பாக்கம், ஈக்காட்டுதாங்கல் மற்றும் எழும்பூர் பகுதிகளில் மின்சாரம் சில மணி நேரங்கள் துண்டிக்கப்பட்டதால் மக்கள் அவதி அடைந்தனர். 

இந்தநிலையில், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் திடீரென பெய்த கனமழையால் சென்னை விமான நிலையத்தில் விமான சேவைகள் பாதிக்கப்பட்டது. கொழும்புவில் இருந்து 149 பயணிகளுடன் சென்னை வந்த இண்டிகோ விமானம் தரையிறங்க முடியாமல் பெங்களூரு திருப்பி விடப்பட்டது. 10 விமானங்கள் சென்னையிலிருந்து தாமதமாக புறப்பட்டு சென்றது. மேலும்,  விமானங்கள் தரையிறங்க முடியாமல் வானில் வட்டமடித்தன. இதனால், விமானப் பயணிகள் பெரிதும் சிரமத்திற்கு ஆளாகினர்.

Tags:    

மேலும் செய்திகள்