விஜய்க்கும், திமுகவிற்கும் ரகசிய தொடர்பு? - திருமாவளவன் பேட்டி
விஜய்யை கூட்டணிக்கு இழுக்க வேண்டும் என்பது பாஜக, அதிமுகவின் நோக்கம் அல்ல என்று திருமாவளவன் கூறினார்.;
திருச்சி,
திருச்சியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் எம்.பி., நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
பாஜக கூட்டணிக்குள் வர வேண்டாம், வெளியில் இருந்து தி.மு.க. வெறுப்பு அரசியலை தீவிரமாக பரப்புங்கள் என்பது தமிழ்நாட்டில் விஜய் உள்பட பலருக்கு கொடுக்கப்பட்டுள்ள செயல்திட்டம். விஜய்யை கூட்டணிக்கு இழுக்க வேண்டும் என்பது பாஜக மற்றும் அதிமுகவின் நோக்கம் அல்ல. திமுகவை வீழ்த்த வேண்டும், சிறுபான்மை வாக்குகளை பிரிக்க வேண்டும் என்பது தான் அவர்களின் நோக்கம். இதனால் திமுக மீது தாக்குதல் தொடுக்க அனைத்து வகையிலும் விஜய்க்கு துணையாக இருப்பார்கள்.
கரூர் விவகாரத்தில் அரசியல் செய்யத்தான் குறியாக இருக்கிறார்கள். ஆறுதல் கூறுவதை விட, மற்றவர்கள் மீது பழிபோடலாம் என்று எண்ணுகிறார்கள். விஜய்யும் அவ்வாறு கூறுவது அதிர்ச்சியாக உள்ளது. அவர் ஆபத்தான அரசியல் செய்கிறார். ஆபத்தானவர்கள் கைகளில் சிக்கி கொண்டுள்ளார்.
கரூர் விவகாரத்தில் விஜய் மீது வழக்குப்பதிவு செய்யாமல் காவல்துறை மெத்தனமாக செயல்படுகிறது. விஜய் மீது வழக்குப்பதிவு செய்ய தமிழ்நாடு அரசு அச்சப்படுகிறதா? என்கிற சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. மேலும் விஜய்க்கும், தி.மு.க.விற்கும் ரகசிய தொடர்பு உள்ளதா? என்ற கேள்வியும் எழுகிறது. தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.