'வீட்டில் முடங்கியிருந்த பெண்களை வெளியே வரவைத்தது தி.மு.க. அரசுதான்' - அமைச்சர் கீதா ஜீவன்
பெண்களுக்கு எதிரான குற்ற வழக்குகளில் பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்படுகிறது என அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்துள்ளார்.;
சென்னை,
சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன் சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது;-
"மகளிர் மத்தியில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு உள்ள நற்பெயரை கண்டு பொறுக்க முடியாமல் எதிர்க்கட்சியினர் நாடகம் போடுகிறார்கள். பெண்கள் பாதுகாப்புக்கு எதிரான ஆட்சி என பச்சை பொய் கூறுகிறார்கள்.
திராவிட மாடல் அரசு பெண்களை ஏமாற்றிவிட்டதைப் போல் சில சொல்ல வருகிறார்கள். ஒருவேளை அவர்களுக்கு தெரியாமல் இருக்கலாம், பெண்களுக்கு சொத்துரிமை, வேலைவாய்ப்பு, காவல்துறையில் பெண்கள், சுய உதவிக்குழு என்றெல்லாம் வீட்டில் முடங்கியிருந்த பெண்களை வெளியே வரவைத்தது, திருமண உதவித் திட்டம் மூலம் பெண்களை படிக்க வைத்தது எல்லாமே தி.மு.க. அரசுதான்.
பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றச்செயல்கள் வெளியே வராத நிலை இருந்தது. வழக்குப்பதிவு செய்வதற்கே ஆர்ப்பாட்டம் செய்ய வேண்டிய சூழல் இருந்தது. ஆனால் இன்று தமிழகத்தில் பெண்கள் பாதிக்கப்படும்போது தைரியமாக புகார் அளிக்கிறார்கள். அந்த புகார்கள் மீது பாரபட்சமின்றி உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
தமிழகத்தில் மகளிர் காவல் நிலையம் அதிகரிக்கப்பட்டுள்ளது. மாநில அளவில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றச்செயல்களை தடுக்கும் வகையில் தடுப்புப்பிரிவு உருவாக்கப்பட்டு, கூடுதல் காவல்துறை இயக்குநர் தலைமையில் இயங்கி வருகிறது."
இவ்வாறு அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்தார்.