கரூர் கூட்ட நெரிசல்: மாவட்ட எஸ்.பி., கலெக்டர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி ஐகோர்ட்டில் தவெக மனு

கரூர் தவெக கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர்;

Update:2025-10-06 21:27 IST

கரூர் வேலுசாமிபுரத்தில் கடந்த 27ம் தேதி சனிக்கிழமை தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் பிரசாரம் மேற்கொண்டார். இந்த பிரசாரத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தனர். மேலும், 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இந்த சம்பவம் தொடர்பாக தவெக கரூர் மாவட்ட செயலாளர் உள்பட பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் உள்பட பலர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், கரூர் கூட்ட நெரிசலை தடுக்க தவறியதாக கலெக்டர், மாவட்ட எஸ்.பி. உள்ளிட்டோருக்கு எதிராக தவெக சார்பில் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தை மாவட்ட கலெக்டர், எஸ்.பி. ஆகியோர் தடுக்க தவறியதாகவும், அதிகாரிகள் பணி செய்ய தவறியதாகவும், பணியில் கவனக்குறைவாக செயல்பட்டதால்தான் 41 பேர் உயிரிழந்ததாகவும் தவெக மனு தாக்கல் செய்துள்ளது.

இந்த அதிகாரிகள் மீது தமிழக அரசு துறை ரீதியிலான மற்றும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்க உத்தரவிடக்கோரி தவெக உறுப்பினரும், வழக்கறிஞருமான கார்த்தி என்பவர் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்