வடகிழக்கு பருவமழை: மின் விபத்துகளில் இருந்து பாதுகாத்துக்கொள்வது எப்படி?

மின் விபத்துகளில் இருந்து பாதுகாத்துக்கொள்வது குறித்து மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் விளக்கம் அளித்துள்ளார்.;

Update:2025-10-08 08:06 IST

வடகிழக்கு பருவமழை தொடங்கியதால் மின் விபத்துகளில் இருந்து பாதுகாத்துக்கொள்வது எப்படி? என்பது குறித்து கிருஷ்ணகிரி மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் கவிதா விளக்கம் அளித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ளதால், உரிய வழிமுறைகளை பின்பற்றி மின் விபத்துகளில் இருந்து பாதுகாத்துக்கொள்ள வேண்டும். அதன்படி, பொதுமக்கள் மழையாலும், காற்றாலும் அறுந்து விழுந்த மின் கம்பிகள் மற்றும் சேதமடைந்த மின் கம்பங்கள் ஏதேனும் இருந்தால் அதன் அருகாமையில் செல்ல கூடாது.

மேலும் மின் கம்பம் மற்றும் ஸ்டே கம்பிகளில் விளம்பர பலகைகள், கால்நடைகளை கட்டக் கூடாது. இடி, மின்னல் ஏற்படும் போது வெட்டவெளி, மரங்கள் அடியில், மின்கம்பங்கள், மின் கம்பிகள் அடியில் தஞ்சம் அடைய வேண்டாம். பாதுகாப்பாக கான்கிரீட் கட்டிடங்களில் தஞ்சம் அடைய வேண்டும். இடி, மின்னலின் போது தண்ணீர் தேங்கியுள்ள பகுதிகளுக்கு செல்வதை தவிருங்கள்.

இடி, மின்னலின் போது திறந்த நிலையில் உள்ள ஜன்னல்கள், கதவு போன்றவற்றின் அருகில் இருக்கக்கூடாது. கண்டிப்பாக டி.வி.க்கு வரும் கேபிளின் தொடர்பை துண்டித்து விடுங்கள். டி.வி., மிக்சி, கிரைண்டர், கணினி மற்றும் தொலைபேசி போன்றவற்றை பயன்படுத்துவதை தவிர்த்துவிடுங்கள்.

மேலும் மழைக்காலங்களில் மின்மாற்றிகள், மின்கம்பங்கள், மின் பகிர்வு பெட்டிகள், ஸ்டே ஒயர்கள் ஆகியவற்றின் அருகில் செல்லக்கூடாது. டிப்பர் லாரி, கனரக வாகனங்களை உயரழுத்த, தாழ்வழுத்த மின்பாதை அருகில் நிறுத்தி வைக்கக்கூடாது. கேபிள் டி.வி. ஒயர்களை மேல்நிலை மின் கம்பிகளுக்கு அருகில் கொண்டு செல்ல கூடாது. மின்மாற்றி, மின் கம்பிகளில் மின்வாரிய பணியாளர்கள் தவிர வேறு யாரும் ஏறக்கூடாது. மின்மாற்றியில் ப்யூஸ் போயிருப்பின், அதனை சரி செய்ய மின் ஊழியரிடம் தெரிவிக்க வேண்டும். மின்மாற்றி பழுது, மின்தடை, மின் விபத்து மற்றும் இடையூறுகளுக்கு உரிய பிரிவு பொறியாளர்களை தொடர்பு கொள்ள வேண்டும்.

மின்சாரத்தினால் ஏற்படும் தீ விபத்தின் போது, மின்சார சப்ளையை உடனடியாக நிறுத்த வேண்டும். மின்சாரத்தினால் ஏற்படும் தீ விபத்தின் போது, அருகே தீப்பற்றக்கூடிய பேப்பர், பிளாஸ்டிக் பொருட்கள், எண்ணெய் போன்ற பொருட்களை அப்புறப்படுத்த வேண்டும்.

மேற்காணும் வழிமுலைகளை பின்பற்றி மின் விபத்துகளில் இருந்து தங்களை பாதுகாத்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்