கல்லூரியில் மாணவிக்கு பாலியல் தொல்லை - பேராசிரியர் போக்சோவில் கைது
கல்லூரியில் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பேராசிரியரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.;
கோப்புப்படம்
திருச்சி கே.கே.நகர் அமலாபுரம் காலனியை சேர்ந்தவர் தமிழ் (52 வயது). இவர் திருச்சி அருகே உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பேராசிரியராக வேலை பார்த்து வருகிறார். கடந்த 13-ந்தேதி அந்த கல்லூரியில் படிக்கும் 17 வயதுடைய மாணவி ஒருவரை, பேராசிரியர் தமிழ் தனது அறைக்கு அழைத்துள்ளார். பின்னர் அந்த மாணவியிடம் அவர் ஆபாசமாக பேசி, பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து அந்த மாணவி, கல்லூரியின் துணை முதல்வர் மற்றும் வகுப்பு பேராசிரியரிடம் தெரிவித்ததாகவும், ஆனால் அவர்கள் உரிய விசாரணை நடத்தவில்லை என்றும் தெரிகிறது. இதையடுத்து அந்த மாணவி தனது பெற்றோரிடம் நடந்த சம்பவம் பற்றி கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அவர்கள், மணிகண்டம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர்.
அதன்பேரில் விசாரணை நடத்திய போலீசார், இந்த புகாரை திருவெறும்பூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து தமிழை கைது செய்தனர். பின்னர் அவரை திருச்சி மகளிர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.
இதற்கிடையே இந்த பிரச்சினை தொடர்பாக நடவடிக்கை எடுக்காத கல்லூரி துணை முதல்வர், வகுப்பு பேராசிரியர் மீதும் வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்று அந்த மாணவி தரப்பில் தெரிவித்து வருவதாக கூறப்படுகிறது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.