மாமல்லபுரத்தை சுற்றிப் பார்க்க பரிந்துரை கடிதம் இல்லாததால் வெளியே நிறுத்தி வைக்கப்பட்ட சுவிட்சர்லாந்து ஆக்கி வீரர்கள்
ரூ.15,600 கட்டணம் செலுத்தி நுழைவுச் சீட்டை பெற்ற பிறகு சுவிட்சர்லாந்து ஆக்கி வீரர்கள் உள்ளே அனுமதிக்கப்பட்டனர்.;
செங்கல்பட்டு,
ஜூனியர் உலகக் கோப்பை ஆக்கி போட்டி சென்னை மற்றும் மதுரையில் நடந்து வருகிறது. நவம்பர் 29-ந்தேதி தொடங்கிய இந்த போட்டித் தொடர், டிசம்பர் 10-ந்தேதி வரை நடைபெற உள்ளது. இந்த போட்டியில் 24 சர்வதேச நாடுகளைச் சேர்ந்த அணிகள் பங்கேற்கின்றன. இதற்காக பல்வேறு நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் தமிழகத்திற்கு வருகை தந்துள்ளனர்.
அந்த வகையில் சுவிட்சர்லாந்து நாட்டைச் சேர்ந்த ஆக்கி அணி வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் சென்னைக்கு வருகை தந்துள்ளனர். அவர்கள் மாமல்லபுரத்தில் உள்ள புராதன சின்னங்களை பார்வையிடுவதற்காக சென்றுள்ளனர். ஆனால் அவர்கள் உள்ளே செல்ல அனுமதி கிடைக்கவில்லை. சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக சுவிட்சர்லாந்து வீரர்கள் வெளியே நிறுத்தி வைக்கப்பட்டனர்.
அவர்களுடன் வந்திருந்த பயிற்சியாளர், மாமல்லபுரத்தில் சக வெளிநாட்டு பயணிகள் நுழைவுச் சீட்டு வாங்குவது போல் ரூ.600 கட்டணம் செலுத்தி, மொத்தமாக 26 பேருக்கு ரூ.15,600 கட்டணம் செலுத்தி நுழைவுச் சீட்டை பெற்றார். பின்னர் நுழைவுச் சீட்டை காண்பித்து அவர்கள் மாமல்லபுரத்தில் உள்ள புராதன சின்னங்களை பார்வையிட்டுச் சென்றனர். அவர்களின் வருகை குறித்து விளையாட்டுத் துறை அதிகாரிகள் தொல்லியல் துறைக்கு பரிந்துரை கடிதம் வழங்காததால் இந்த குழப்பம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.