தூத்துக்குடி: காவலர் தேர்வுக்கு தயாராகி வரும் மாணவர்களுக்கு புத்தகங்கள் வழங்கிய போலீசார்
ஏழை எளிய மாணவர்களை கண்டறிந்து அவர்களுக்கு தேவையான புத்தகங்களை வழங்கிய முத்தையாபுரம் போலீசாரை மாவட்ட எஸ்.பி. ஆல்பர்ட் ஜான், நகர ஏ.எஸ்.பி. மதன் ஆகியோர் பாராட்டினர்.;
2025ம் ஆண்டிற்கான இரண்டாம் நிலை காவலர் தேர்வுக்கு விண்ணப்பித்து தேர்விற்கு தயாராகி கொண்டிருக்கும் முத்தையாபுரம் பகுதிகளைச் சேர்ந்த முதல் நிலை பட்டதாரிகள் மற்றும் ஏழை எளிய மாணவ மாணவிகள் 20 பேருக்கு, போட்டித் தேர்வுக்கு உதவியாக நோட்டு மற்றும் புத்தகங்களை முத்தையாபுரம் காவல் நிலையத்தில் வைத்து இன்று போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜீவமணி தர்மராஜ், சப்-இன்ஸ்பெக்டர்கள் ராமகிருஷ்ணன், முகிலரசன் ஆகியோர் வழங்கினர். மேலும் அவர்கள் தேர்வுக்கு தயாராவது குறித்து அந்த மாணவர்களுக்கு அறிவுரைகள் வழங்கி ஊக்கப்படுத்தினர்.
இதனை தொடர்ந்து, ஏழை எளிய மாணவர்களை கண்டறிந்து அவர்களுக்கு தேவையான புத்தகங்களை வழங்கி தேர்வு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி ஊக்கப்படுத்திய முத்தையாபுரம் காவல் நிலைய போலீசாரை மாவட்ட எஸ்.பி. ஆல்பர்ட் ஜான், தூத்துக்குடி நகர உட்கோட்ட ஏ.எஸ்.பி. மதன் ஆகியோர் பாராட்டினர்.