திருநெல்வேலி: பழிக்கு பழி கொலை வழக்கில் 3 பேருக்கு ஆயுள் தண்டனை

திருநெல்வேலி மாவட்டத்தில் 2025-ம் ஆண்டு இதுவரை 18 கொலை வழக்குகளில் ஒரு நபருக்கு மரண தண்டனையும், 63 நபர்களுக்கு ஆயுள் தண்டனையும் வழங்கப்பட்டுள்ளது.;

Update:2025-09-18 02:02 IST

திருநெல்வேலி மாவட்டம், அம்பை அருகே வாகைகுளத்தில் கடந்த 1999-ம் ஆண்டு இரு தரப்பினருக்கு இடையே, வயலில் தண்ணீர் பாய்ச்சுவது தொடர்பாக ஏற்பட்ட விரோதத்தில், தொடர்ச்சியாக நடந்த இரண்டு கொலை சம்பவத்தின் முன்விரோதம் காரணமாக, கடந்த 2013-ம் ஆண்டு அம்பாசமுத்திரம், வாகைகுளத்தை சேர்ந்த கிருஷ்ணன், சபரிமுத்து, பாக்யராஜ், விஜய் ஆகியோர் சேர்ந்து அதே ஊரைச் சேர்ந்த செல்வராஜ் (வயது 32) என்பவரை முன்னீர்பள்ளம் பகுதியில் கொலை செய்த வழக்கில், திருநெல்வேலி முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்த நிலையில், குற்றவாளிகளான கிருஷ்ணன் சென்ற வருடம் இயற்கையான முறையில் இறந்த நிலையில், மற்ற குற்றவாளிகளான சவரிமுத்து(37), பாக்யராஜ்(40), சரித்திர பதிவேடு குற்றவாளி விஜய்(31) ஆகிய 3 பேருக்கும் எதிரான குற்றம் நிரூபிக்கப்பட்டு, நீதிபதி செல்வம் நேற்று முன்தினம் குற்றவாளிகள் 3 பேருக்கும் ஆயுள் தண்டனையும், அபராதம் தலா ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.

இந்த வழக்கில் திறம்பட சாட்சிகளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்று தந்த சேரன்மகாதேவி உட்கோட்ட டி.எஸ்.பி. அஸ்வந்த்அன்டோ ஆரோக்கியராஜ், போலீஸ் இன்ஸ்பெக்டர் வேல்ராஜ், முன்னீரபள்ளம் காவல்துறையினர், இவ்வழக்கினை திறம்பட புலனாய்வு செய்த போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்து சுப்பிரமணியன் (தற்போது தாம்பரம் காவல் ஆணையரகம்), நீதிமன்றத்தில் சிறப்பாக வாதிட்ட அரசு வழக்கறிஞர் கருணாநிதி ஆகியோரை மாவட்ட எஸ்.பி. சிலம்பரசன் பாராட்டினார்.

2025-ம் ஆண்டில் மட்டும், இதுவரை 18 கொலை வழக்குகளில் குற்றங்கள் நிரூபிக்கப்பட்டு குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்று தரப்பட்டுள்ளது. இதில் ஒரு நபருக்கு மரண தண்டனையும், 63 நபர்களுக்கு ஆயுள் தண்டனையும் வழங்கப்பட்டுள்ளது. இதில் 21 நபர்கள் சரித்திர பதிவேடு குற்றவாளிகள் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்த ஆண்டில் மட்டும் சரித்திர பதிவேடு உடைய நபர்கள் 24 பேருக்கு தண்டனை பெற்றுத் தரப்பட்டுள்ளது. அதில் கொலை வழக்கில் 21 நபர்களுக்கும், கொலை முயற்சி வழக்கில் 2 நபர்களுக்கும், போக்சோ வழக்கில் 1 நபருக்கும் தண்டனை பெற்று தரப்பட்டுள்ளது. நீதிமன்றங்களில் நடைபெறும் வழக்குகளில் சாட்சிகளை ஆஜர்படுத்தி, குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத் தரும் முனைப்பில் தொடர்ந்து, உரிய சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது என மாவட்ட காவல்துறை தெரிவித்துள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்