டி.என்.பி.எஸ்.சி தேர்வுக்கான கட்டணங்களை யுபிஐ மூலம் செலுத்தும் வசதியை தேர்வாணையம் அறிமுகம் செய்துள்ளது. ஒருமுறை பதிவுக்கட்டணம், தேர்வுக்கான கட்டணங்களை யுபிஐ மூலம் இனி செலுத்தலாம்.
கடலூரில் லாரி ஓட்டுநர்களை அரிவாளால் வெட்டி வழிப்பறி செய்த சம்பவத்தில் தொடர்புடைய ரவுடி என்கவுன்ட்டரில் சுட்டுக்கொல்லப்பட்டார். புதுச்சேரி மாநிலத்தை சேர்ந்த பிரபல ரவுடி விஜய், கடலூர் போலீசாரின் என்கவுன்ட்டரில் உயிரிழந்தார். போலீசார் பிடிக்க முயன்ற போது ரவுடி விஜய் அரிவாளால் தாக்கியதால் தற்காப்புக்காக சுட்டுக்கொன்றதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்தியாவில் உள்ள வக்பு வாரிய சொத்துக்களை நிர்வகிப்பது மற்றும் ஒழுங்குபடுத்துவது தொடர்பாக மத்திய அரசு வக்பு வாரிய சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்துள்ளது. இந்த திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட்டது.
இதனை முன்னிட்டு நாடாளுமன்றத்தில் பேசிய மத்திய மந்திரி கிரண் ரிஜிஜு, வக்பு மசோதா மூலம் மசூதிகள் கையகப்படுத்தப்படும் என்பது தவறான பிரசாரம். பெண்கள் மற்றும் குழந்தைகளின் நலனுக்கான அம்சங்கள் மசோதாவில் இடம் பெற்றுள்ளன. வக்பு வாரிய நடவடிக்கைகளில் மத்திய அரசு ஈடுபடாது என்று கூறினார்.
அதில், தலையிடுவதற்காக மசோதா கொண்டு வரப்படவில்லை என்றார். இந்த மசோதாவை எதிர்ப்பவர்களை வரலாறு மன்னிக்காது என்றும் கூறினார். மசோதா மீது இன்று விவாதம் நடைபெறுகிறது. இதன் பின்னர் வாக்கெடுப்பு நடைபெறும்.
கச்சத்தீவை மீட்க கோரி தமிழக சட்டசபையில், முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் தனித்தீர்மானம் கொண்டு வந்து பேசினார். இதன்பின்னர், தனித்தீர்மானம் அவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டு உள்ளது.
இந்நிலையில், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அ.தி.மு.க. உறுப்பினர்கள் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். இதன்பின்னர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களிடம் பேசும்போது, கச்சத்தீவு விவகாரத்தில் முழுமையாக அவையில் பேச அனுமதிக்கப்படவில்லை.
39 எம்.பி.க்களும் ஏன் நாடாளுமன்றத்தில் அழுத்தம் கொடுக்கவில்லை. தேர்தல் வரவுள்ள சூழலில், அதனை மனதில் வைத்து தீர்மானம் கொண்டு வந்துள்ளனர்.
4 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்தபோது அவர்கள் ஏன்? தீர்மானம் கொண்டு வரவில்லை. தற்போது கொண்டு வந்திருக்கிறார்கள். இது தி.மு.க. அரசின் நாடகம் என குற்றச்சாட்டாக கூறியிருக்கிறார்.
கச்சத்தீவை மீட்க கோரி தமிழக சட்டசபையில், முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் கொண்டு வந்த தனித்தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டு உள்ளது.
10 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த நீங்கள் கச்சத்தீவு விவகாரத்தில் என்ன செய்தீர்கள்? என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
வாஜ்பாய் அரசில் அங்கம் வகித்த நீங்கள், அப்போது ஏன் அழுத்தம் கொடுக்கவில்லை. அப்போது என்ன செய்தீர்கள்?
டெல்லிக்கு சமீபத்தில் சென்று வந்துள்ளீர்கள். கச்சத்தீவு விவகாரம் பற்றி வலியுறுத்தினீர்களா? என கேட்டுள்ளார். நான் 54 முறை கடிதம் எழுதியிருக்கிறேன். தொடர்ந்து அழுத்தம் கொடுத்திருக்கிறோம் என்றும் அவர் கூறியுள்ளார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் டெல்லி அணிகளுக்கு இடையே நடைபெறும் ஐ.பி.எல். போட்டிக்கான ஆன்லைன் டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்பட்ட சில நிமிடங்களிலேயே விற்று தீர்ந்து விட்டன.
இடைத்தரகர்கள் மூலம் டிக்கெட்டுகள் மொத்தமாக புக் செய்யப்பட்டு, கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்படுகின்றன என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
விற்பனையை முறைப்படுத்த வேண்டும் என ரசிகர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
நடிகர் மோகன்லால் நடிப்பில் வெளியான எம்புரான் என்ற மலையாள திரைப்படத்தில், முல்லை பெரியாறு அணையை தவறாக சித்தரிக்கும் காட்சிகளை நீக்க வேண்டும் என தமிழக விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், இதற்கு எதிராக தேனி மாவட்டம் கம்பத்தில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கம்பம் நீர்வள துறை அலுவலகம் அருகே அவர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
கூடலூரில் சர்வர் சரிவர வேலை செய்யாத நிலையில், இ-பாஸ் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது. இதனால், முதுமலை வனப்பகுதி எல்லையில் பயணிகள் நீண்டநேரம் காத்திருக்க கூடிய நிலை ஏற்பட்டு உள்ளது. கர்நாடகாவில் இருந்து சுற்றுலா வர கூடிய பயணிகளும் அவதியடைந்து உள்ளனர்.