ஈரோடு ரெயில் நிலையத்தில் கேட்பாரற்றுக் கிடந்த சுமார் 6 கிலோ கஞ்சா கைப்பற்றப்பட்டது. ரோந்து பணியின் போது ஒதுக்குப்புறமாக இருந்த பையை போலீசார் சோதனையிட்டதில் உள்ளே கஞ்சா இருப்பது தெரியவந்துள்ளது. சிசிடிவி காட்சிகளைக் கொண்டு ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
எம்.எல்.ஏ அருள் மீது தாக்குதல் - அன்புமணி தரப்பில் 7 பேர் கைது
சேலத்தில் ராமதாஸ் தரப்பு எம்.எல்.ஏ அருள் மீது தாக்குதல் நடத்திய விவகாரத்தில் அன்புமணி ஆதரவாளர்கள் 7 பேரைக் கைது செய்து ஏத்தாப்பூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மாவட்ட செயலாளர் நடராஜ் அளித்த புகாரில் பூவிழி ராஜா (33), விக்னேஷ் (25), வெங்கடேசன் (37), சரவணன் (30), அருள்மணி (32), விமல் ராஜ் (22), தமிழ்ச்செல்வன் (29) ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வாக்கு திருட்டு விவகாரம்: ராகுல் காந்தி குற்றச்சாட்டுக்கு கிரண் ரிஜிஜு பதில்
பீகார் சட்டசபை தேர்தலில் முதல் கட்ட ஓட்டுப்பதிவுக்கான பிரசாரம் நேற்று மாலையுடன் முடிவடைந்த நிலையில், நாளை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்நிலையில், வாக்கு திருட்டு குறித்து இன்று (நவம்பர் 5) ராகுல் காந்தி நிருபர்களை சந்தித்தார். மத்தியில் ஆளும் பாஜக, தேர்தல் ஆணையத்தை தனது கைப்பாவையாக வைத்துக்கொண்டு வாக்கு திருட்டில் ஈடுபடுவதாக ராகுல் காந்தி தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறார்.
2026 சட்டசபை தேர்தல்; நிர்வாகிகளுக்கு விரிவாக ஆலோசனை வழங்கிய எடப்பாடி பழனிசாமி
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் மற்றும் சட்டசபையின் எதிர்க்கட்சி தலைவர், தமிழ்நாடு முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில், சென்னை, ராயப்பேட்டை, அவ்வை சண்முகம் சாலையில் உள்ள தலைமை கழகத்தின் எம்.ஜி.ஆர். மாளிகையில் இன்று மாவட்ட கழக செயலாளர்கள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் அவர், கழக அமைப்பு ரீதியாக செயல்பட்டு வரும் மாவட்டங்களில், பூத் (பாகம்) கிளை கழகங்களை சேர்ந்த நிர்வாகிகள் அனைவரையும் ஆன்லைனில் ஒருங்கிணைப்பது உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருவது குறித்த விபரங்களை மாவட்ட கழக செயலாளர்களிடம் முழுமையாக கேட்டறிந்து, இப்பணியினை விரைந்து முடிக்குமாறு எடப்பாடி பழனிசாமி கேட்டுக்கொண்டார்.
ரூ.23 கோடி செலவில் மேம்படுத்தப்பட்ட திருச்செங்கோடு அரசு மருத்துவமனை: முதல்-அமைச்சர் திறந்து வைத்தார்
நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில் சராசரியாக நாள் ஒன்றுக்கு 728 வெளிநோயாளிகள், 117 உள்நோயாளிகள், மாதத்திற்கு 105 பிரசவங்கள், 13,691 ஆய்வக பரிசோதனைகள், 677 USG Scan மற்றும் 204 பெரிய அறுவை சிகிச்சைகள் மற்றும் 707 சிறிய அறுவை சிகிச்சைகள் நடைபெற்று வருகின்றன.
ரூ.23 கோடி செலவில் தரை மற்றும் நான்கு தளங்கள் கொண்ட புதிய மருத்துவக் கட்டடத்துடன் 225 படுக்கை வசதிகளுடன் மேம்படுத்தப்பட்ட திருச்செங்கோடு அரசு மருத்துவமனையை முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.
ஏமாற்றும் மாடலுக்கு தமிழக மகளிர் ஏமாற்றத்தையே பரிசளிப்பர் - நயினார் நாகேந்திரன்
"விடுபட்டோர் எல்லோருக்கும் கண்டிப்பாக மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும்" என்று துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிவித்த இரண்டு நாட்களுக்குள்ளேயே திமுக அரசின் சாயம் வெளுத்துவிட்டது. இப்படி ஒவ்வொரு மாவட்டத்திலும் "தகுதியற்றவர்கள்" என்ற போர்வையில், சுமார் 40 சதவீத மனுக்களை நிராகரித்து, நாலாப்புறமும் விளம்பரம் மட்டும் வெளியிட்டு, தமிழக மகளிரை ஏமாற்றுவது தான் உரிமைத் தொகையா முதல்-அமைச்சரே?
தவெக தலைவர் விஜய் செப்டம்பர் 27ம் தேதி கரூரில் பிரசாரம் செய்தபோது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி, 41 பேர் பலியாகினர். இந்த சம்பவம் நாடு முழுவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தின் எதிரொலியாக பனையூரில் உள்ள வீட்டில் விஜய் வெளியே எங்கும் செல்லாமல் முடங்கினார். இவ்வழக்கை சி.பி.ஐ.,க்கு மாற்றி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. இதையடுத்து, கட்சி பணிகளில், விஜய் மற்றும் மாநில நிர்வாகிகள், மீண்டும் கவனம் செலுத்த துவங்கி உள்ளனர்.
இந்த சூழலில், மாமல்லபுரத்தில் உள்ள தனியார் விடுதியில் இன்று காலை த.வெ.க., சிறப்பு பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. கரூர் சம்பவம் நடந்து 38 நாட்களுக்கு பின், கட்சி நிர்வாகிகளுடன், பொதுக்குழு கூட்டத்தில் விஜய் பங்கேற்றார்.
இக்கூட்டத்தில் மாநில நிர்வாகிகள், மாவட்ட செயலர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள் என 1,400க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றனர்.
ராசிபுரத்தில் மினி டைடல் பூங்கா அமைப்பதற்கு அடிக்கல் நாட்டினார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின், இன்று (5.11.2025) தலைமைச் செயலகத்திலிருந்து காணொலிக் காட்சி வாயிலாக தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை சார்பில், வேலூரில் ரூ.32 கோடி செலவில் 600 தகவல் தொழில்நுட்ப வல்லுநர்களுக்கு புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள வேலூர் மினி டைடல் பூங்காவினை திறந்து வைத்தார். மேலும், நாமக்கல் மாவட்டம், ராசிபுரத்தில் ரூ.37 கோடி மதிப்பீட்டில் 600 தகவல் தொழில்நுட்ப வல்லுநர்களுக்கு புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையில் மினி டைடல் பூங்கா அமைப்பதற்கு அடிக்கல் நாட்டினார்.
கோவாவில் பாகிஸ்தான் ஆதரவு கோஷங்கள் - 9 பேர் கைது
கோவாவின் வடக்கு பகுதியில் பாகா மற்றும் அர்போரா ஆகிய 2 கடற்கரை கிராமங்களில் உள்ள 2 கடைகளில், எல்.இ.டி. விளம்பர பலகைகளில் பாகிஸ்தான் ஆதரவு கோஷங்கள் எழுதப்பட்டிருந்ததாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி, இதுவரை 9 பேரை அதிரடியாக கைது செய்துள்ளனர்.
அந்த கடைகளில் இருந்த எல்.இ.டி. பலகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. சம்பந்தப்பட்ட 2 கடைகளின் உரிமையாளர்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்பதும், அதே சமயம் 2 கடைகளிலும் ஒரே நேரத்தில் எல்.இ.டி. விளம்பர பலகையில் பாகிஸ்தான் ஆதரவு கோஷம் தோன்றியுள்ளது என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து இது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
பல லட்சம் வாக்காளர்கள் நீக்கப்படும் அபாயம் - என்.ஆர்.இளங்கோ குற்றச்சாட்டு
செய்தியாளர்கள் சந்திப்பில் திமுக சட்டத்துறைச் செயலாளர் வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ எம்.பி பேசியதாவது:-
தமிழ்நாட்டில் மிகுந்த குழப்பத்துடன் SIR பணிகள் நடைபெறுகிறது. SIR பணிகளில் தேர்தல் ஆணைய விதிகளை மீறி வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் செயல்படுகின்றனர். கணக்கீடு படிவத்தை நிரப்பி தரவில்லை என்றால் பட்டியலில் இருந்து பல லட்சம் வாக்காளர்கள் நீக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.