சமூக, அரசியல் வாழ்வில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியவர் முத்துராமலிங்கத் தேவர் - பிரதமர் மோடி புகழாரம்
இந்தியாவின் சமூக மற்றும் அரசியல் வாழ்வில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்திய மாபெரும் ஆளுமையான பசும்பொன் முத்துராமலிங்க தேவருக்குப் புனிதமான குரு பூஜையின்போது மனமார்ந்த அஞ்சலி செலுத்துகிறேன் என்று பிரதமர் மோடி தமிழில் பதிவிட்டுள்ளார்.
சீனப் பொருட்கள் மீதான வரியை 10 சதவீதம் குறைப்பதாக டிரம்ப் அறிவிப்பு
தென்கொரியாவின் புசான் நகரில் சீன அதிபர் ஜின்பிங்கை அமெரிக்க அதிபர் டிரம்ப் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். பரஸ்பர வரி விதிப்பு, அரிய வகை கனிம ஏற்றுமதிக்கான கட்டுப்பாடுகள் குறித்து இரு நாட்டு தலைவர்களும் ஆலோசனை நடத்தினர். இதில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சீன அதிபரை சந்தித்து பேசிய பிறகு அதிபர் டிரம்ப் கூறியதாவது:-
சீன அதிபர் ஜி ஜின்பிங் உடனான சந்திப்பு வெற்றிகரமாகவும், பயனுள்ளதாகவும் இருந்தது. சீன பொருட்களுக்கான இறக்குமதி வரி 57 சதவீதத்தில் இருந்து 47 சதவீதமாக குறைக்கப்படும். சீனாவுடன் மேலும் பேச்சுவார்த்தைகளுக்காக அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் சீனா செல்கிறேன். அதன்பின் சீன அதிபரும் அமெரிக்கா வருகிறார். சீனாவுக்கு கண்ணி சிப்ஸ்களை ஏற்றுமதி செய்வது குறித்து இன்று ஆலோசித்தோம். விரைவில் வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாகலாம். இவ்வாறு அவர் கூறினார்.
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்தில் கைகலப்பு
தேவர் ஜெயந்தியை முன்னிட்டு பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்துக்கு மூவேந்தர் முன்னேற்றக் கழகத் தலைவர் ஶ்ரீதர் வாண்டையார் வந்தார். அப்போது அவரை பூசாரிகள் தடுத்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து ஏற்பட்ட வாக்குவாதத்தில் ஶ்ரீதர் வாண்டையார் பூசாரி ஒருவரை கன்னத்தில் அறைந்தார். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.
பின்னர் பூசாரிகளை வெளியேற்றச் சொல்லி ஶ்ரீதர் வாண்டையார் தர்ணாவில் ஈடுபட்டார். அவரிடம் போலீசார் சமரசம் பேசினர். அப்போது அங்கு வந்த டிடிவி தினகரன், செங்கோட்டையன் மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் அவரை சமாதானம் செய்தனர். இதைத் தொடர்ந்து ஶ்ரீதர் வாண்டையார் தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திவிட்டு அங்கிருந்து சென்றார்.
ஒரே காரில் பயணம் செய்த ஓபிஎஸ் - செங்கோட்டையன்: எடப்பாடி பழனிசாமியின் ரியாக்சன்
ஓ.பன்னீர்செல்வம், செங்கோட்டையன் இருவரும் ஒரே காரில் பயணித்தது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த எடப்பாடி பழனிசாமி, "தெரியவில்லை. வந்தால் தான் தெரியும். வந்தால் நான் பதில் சொல்கிறேன்" என்று கூறினார்.
118-வது ஜெயந்தி விழா: முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்தில் மு.க.ஸ்டாலின் மரியாதை
பசும்பொன்னில் இன்று தேவர் ஜெயந்தி விழா, குருபூஜை அரசு விழாவாக நடைபெற்று வருகிறது. இதில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு முத்துராமலிங்கத் தேவர் நினைவாலயத்தில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து, மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
ஓ.பி.எஸ் - செங்கோட்டையன் ஒரே காரில் பயணம்
மதுரையிலிருந்து பசும்பொன்னுக்கு ஓ.பன்னீர்செல்வத்துடன் ஒரே காரில் செங்கோட்டையன் பயணம் செய்துள்ள சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முத்துராமலிங்கத் தேவரின் ஜெயந்தி மற்றும் குருபூஜையை ஒட்டி, பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்கத் தேவரின் நினைவிடத்தில் மரியாதை செலுத்துவதற்காக இருவரும் ஒரே காரில் பயணம் செய்துள்ளனர்.
தமிழக சட்டசபை தேர்தலில் போட்டி 3 முனையா?, 4 முனையா? - எது யாருக்கு சாதகம்?
தமிழகத்தில் 4 முனைப்போட்டி நிலவினால், தற்போதைய ஆளுங்கட்சியான தி.மு.க.வுக்கே அதிக வெற்றி வாய்ப்பு உள்ளது. நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் அதிக அளவு வாக்குகளை பெறும் என்று கணிக்கப்பட்டாலும், அது எத்தனை இடங்களில் வெற்றிக்கனியை பறிக்கும் என்பது கேள்விக்குறிதான்.
நடிகர் விஜய்யின் கட்சியான தமிழக வெற்றிக் கழகத்தை இழுக்க வெளிப்படையாகவே அ.தி.மு.க. முயன்று வருகிறது. திரை மறைவில் காங்கிரஸ் கட்சியும் பேச்சு வார்த்தை நடத்தி வருவதாக சொல்லப்படுகிறது. இந்த 2-ல் எது நடந்தாலும் கூட்டணி கணக்கில் பெரும் மாற்றம் ஏற்படும்.
அ.தி.மு.க. கூட்டணிக்கு தமிழக வெற்றிக் கழகம் வந்தால், பா.ஜ.க. வெளியேறும் சூழ்நிலை ஏற்படும். அதே நேரத்தில், பா.ம.க., தே.மு.தி.க., தி.மு.க. கூட்டணியில் உள்ள சில கட்சிகள் ஒன்றிணையவும் வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது. இதுபோன்று ஒரு சூழ்நிலை ஏற்பட்டால், வெற்றி வாய்ப்பும் மாறும் நிலை உருவாகலாம்.
அதிரடியாக குறைந்த தங்கம் விலை... ஒரு சவரன் ரூ.89 ஆயிரத்துக்கு கீழ் வந்தது
தங்கம் விலை அதிரடியாக குறைந்து, மீண்டும் ஒரு சவரன் ரூ.89 ஆயிரத்துக்கு கீழ் வந்துள்ளது. அதன்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.1,800 குறைந்து, ஒரு சவரன் ரூ.88,800-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.225 குறைந்து, ஒரு கிராம் ரூ.11,100-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1-ம், கிலோவுக்கு ரூ.1,000-ம் குறைந்து ஒரு கிராம் ரூ.165-க்கும், ஒரு கிலோ ரூ.1 லட்சத்து 65 ஆயிரத்துக்கும் விற்பனையாகி வருகிறது.
சீனாவும் அமெரிக்காவும் கூட்டாளிகளாக இருக்க வேண்டும் - சீன அதிபர் ஜின்பிங்
தென் கொரியாவில் அமெரிக்க அதிபர் டிரம்ப் உடனான சந்திப்பின்போது சீன அதிபர் ஜின்பிங் பேசியதாவது:-
“இரு நாடுகளுக்கும் அவ்வப்போது உராய்வுகள் இருப்பது இயல்பு. சீனாவும் அமெரிக்காவும் கூட்டாளிகளாகவும், நண்பர்களாகவும் இருக்க வேண்டும் என்று பலமுறை பொதுவெளியில் கூறியுள்ளேன். உலகின் 2 முன்னணி பொருளாதாரங்களுக்கு இடையே அவ்வப்போது உராய்வுகள் இருப்பது இயல்பு, இருப்பினும் இரு நாடுகளின் வளர்ச்சிக்கு ஒரு நல்ல சூழலை உருவாக்க ட்ரம்புடன் தொடர்ந்து பணியாற்ற தயாராக உள்ளேன்” என்று கூறினார்.