78 வயது... ஜனாதிபதி பணியாற்ற தகுதி வாய்ந்தவரா டிரம்ப்? வெளியான டாக்டரின் அதிர்ச்சி அறிக்கை

டிரம்புக்கு, 2020-ம் ஆண்டில் இருந்த எடையை விட 20 பவுண்டுகள் வரை எடை குறைந்துள்ளது.;

Update:2025-04-14 19:49 IST

வாஷிங்டன் டி.சி.,

அமெரிக்காவில் கடந்த ஆண்டு நவம்பரில் நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில் ஜோ பைடனை எதிர்த்து போட்டியிட்ட, குடியரசு கட்சியை சேர்ந்த வேட்பாளரான டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்றார். கடந்த ஜனவரி 20-ந்தேதி இதற்காக நடந்த பதவியேற்பு விழாவில் புதிய ஜனாதிபதியாக டிரம்ப் பொறுப்பேற்று கொண்டார்.

அவர் பதவிக்கு வந்ததும் பல உத்தரவுகளை பிறப்பித்து வருகிறார். பல புதிய நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறார். அரசாங்க செலவினங்களை குறைப்பதற்காக புதிய துறையை உருவாக்கினார். சட்டவிரோத குடியேறிகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை எடுத்துள்ளார். அவர்களை நாடு கடத்தவும் செய்துள்ளார்.

சமீபத்தில் சீனா உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு எதிராக கடுமையான வரி விதிப்புகளை அமல்படுத்தி உத்தரவிட்டார். அமெரிக்காவில் வசிக்கும் வெளிநாட்டவர்கள் அனைவரும் 30 நாட்களுக்கு மேல் தங்கினால் அவர்கள் அரசிடம் பதிவு செய்து கொள்ள வேண்டும் என புதிய விதியையும் அறிமுகப்படுத்தி உள்ளார்.

இந்நிலையில், டிரம்புக்கு உடல்தகுதிக்கான பரிசோதனை நடைபெற்றது. இதுபற்றி வெள்ளை மாளிகை நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டு உள்ளது. அதில் டிரம்பின் உடல்தகுதியை ஆய்வு செய்த டாக்டரான சீன் பார்பபெல்லா வெளியிட்ட செய்தியில், தலைமை தளபதியாக மற்றும் நாட்டின் தலைவராக பணிகளை மேற்கொள்வதற்கு முழு அளவில் தகுதி வாய்ந்தவராக ஜனாதிபதி டிரம்ப் உள்ளார்.

டிரம்பின் வாழ்க்கை முறையே அவருடைய உடல்நலனுக்கான ஒரு பெரிய காரணியாக பங்காற்றுகிறது என குறிப்பிட்ட டாக்டர், அது தொடர்ந்து டிரம்பின் ஆரோக்கியத்திற்கு முக்கிய பங்கு வகிக்கும் என்றார். வருகிற ஜூன் 14-ல் டிரம்புக்கு 79 வயது ஆகிறது.

டிரம்புக்கு, 2020-ம் ஆண்டில் இருந்த எடையை விட 20 பவுண்டுகள் வரை எடை குறைந்துள்ளது. அவர் இருதய, நரம்பு மற்றும் பொதுவான உடல் இயக்கம் என்ற அளவில் தொடர்ந்து சிறந்த ஆரோக்கியத்துடன் இருக்கிறார் என அந்த அறிக்கை தெரிவிக்கிறது.

டிரம்பின் கொலஸ்டிரால் அளவும் 2018-ல் (223) இருந்த அளவை விட மெதுவாக குறைந்து 140 என்ற அளவுக்கு வந்துள்ளது. இது 200 என்ற இயல்பான அளவை விட நன்றாக குறைவாகவே உள்ளது.

எனினும் அவருக்கு ரத்த அழுத்தம் சற்று உயர்ந்து காணப்படுகிறது. அவர் கொலஸ்டிரால் அளவை கட்டுப்படுத்துவதற்கான மருத்துவம் எடுத்து கொள்வதுடன், மாரடைப்பு மற்றும் ஸ்டிரோக் ஏற்படும் அபாயம் குறைவதற்கான தடுப்பு நடவடிக்கையாக ஆஸ்பிரின் எடுத்து வருகிறார் என அந்த அறிக்கை தெரிவிக்கின்றது.

இதனால், ஜனாதிபதியாக பணியாற்ற டிரம்ப் உடல் தகுதியுடன் உள்ளார் என டாக்டர் பார்பபெல்லாவின் அறிக்கை தெரிவிக்கின்றது. இதனை வெள்ளை மாளிகை வெளியிட்ட தகவலும் உறுதி செய்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்