புதுமைகள் படைக்க இளைஞர்களை தயார்படுத்துவோம்..! இன்று தேசிய அறிவியல் தினம்
தேசிய அறிவியல் தினத்தையொட்டி அறிவியல் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பல்வேறு நிகழ்வுகள் நடைபெறுகின்றன.;
தமிழகத்தின் இயற்பியல் விஞ்ஞானி சர்.சி.வி.ராமன், 1928-ம் ஆண்டு 'ராமன் விளைவு' என்ற அறிவியல் கோட்பாட்டை வரையறுத்தார். இந்திய இயற்பியல் ஆய்விதழில் 1928-ம் ஆண்டு பிப்ரவரி 28-ம் தேதி 'ஒரு புதிய கதிர்வீச்சு' என்னும் தலைப்பில் தனது ஆய்வு முடிவுகளை வெளியிட்டார். இந்த புதிய கண்டுபிடிப்புக்காக அவருக்கு 1930-ம் ஆண்டு இயற்பியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. அவரது கண்டுபிடிப்பை கவுரவிக்கும் வகையில், இந்தியாவில் ஒவ்வொரு வருடமும் பிப்ரவரி 28-ம் தேதி தேசிய அறிவியல் தினமாக கொண்டாடப்படுகிறது.
அறிவியலின் வழி நின்று, மக்கள் சந்திக்கும் எதார்த்த பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டும் என்பதே தேசிய அறிவியல் தினம் உணர்த்தும் செய்தி. மாணவர்களை ஆராய்ச்சியாளர்களாகவும், அறிவியல் அறிஞர்களாகவும் மாற்றுவதற்கு ஊக்கம் அளிக்கும் நாளாக இந்த நாள் அமைந்துள்ளது.
பொதுமக்களிடையே அறிவியல் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும், மக்களிடையே வரவேற்பை பெறுவதற்கும், அறிவியல் கொள்கைகள் குறித்த ஆர்வத்தையும் புரிதலையும் ஊக்குவிப்பதற்கும் இந்த நாள் வழிவகுக்கிறது.
இந்த நாளில் அரசு சார்பில் அறிவியல் சார்ந்த நிகழ்ச்சிகள் நடத்தப்படும். ஆராய்ச்சியாளர்களுக்கு விருதுகள் மற்றும் பரிசுகள் வழங்கி கவுரவிக்கப்படும்.
அவ்வகையில் இந்த ஆண்டுக்கான தேசிய அறிவியல் தினம் இன்று (28.2.2025) கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு கருப்பொருளில் தேசிய அறிவியல் தினம் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டின் கருப்பொருள் 'வளர்ந்த இந்தியா என்ற தொலைநோக்கு பார்வைக்காக அறிவியல் மற்றும் புதுமைகளில் உலகளாவிய தலைமைத்துவத்திற்காக இந்திய இளைஞர்களை மேம்படுத்துதல்' என்பதாகும்.
இந்த கருப்பொருளுடன் கூடிய சொற்பொழிவுகள், கருத்தரங்குகள் நடைபெறும். அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் கீழ் இயங்கும் தேசிய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப தொடர்பு கவுன்சில், இந்தியா முழுவதும் தேசிய அறிவியல் தின கொண்டாட்டங்களை ஒருங்கிணைத்து நடத்துகிறது.