சன்னி லியோன் படத்தை எக்ஸ் தளத்தில் பதிவிட்ட கிரிக்கெட் வீரர் அஸ்வின்..ஏன் தெரியுமா?

அஸ்வினின் இந்த பதிவு சமூக வலைதளங்களில் படு வைரலானது.;

Update:2025-12-09 21:20 IST

image courtesy: twitter/@ashwinravi99

சென்னை,

இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரரான தமிழகத்தை சேர்ந்த ரவிச்சந்திரன் அஸ்வின் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள புகைப்படம் சமூக வலைதளங்களில் படு வைரலாகி வருகிறது. இதற்கு பலரும் பல விதமாக கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.

அப்படி அஸ்வின் என்ன பதிவிட்டுள்ளார்? இதன் மூலம் குறிப்பால் என்ன உணர்த்துகிறார்? என்பது குறித்து இங்கு காணலாம்..!

அஸ்வின் தனது எக்ஸ் பக்கத்தில், பிரபல பாலிவுட் நடிகையான சன்னி லியோனின் புகைப்படத்திற்கு அருகில் ஒரு தெருவின் படத்தை இணைத்து வெளியிட்டுள்ளார். அதில் எதுவும் குறிப்பிடாமல் வெறும் இரண்டு கண்கள் மட்டுமே உள்ள எமோஜிகளை குறிப்பிட்டிருந்தார்.

ஒரு நடிகையின் புகைப்படத்தை ஒரு சாதாரண தெரு படத்துடன் இணைத்து அஸ்வின் பதிவிட்டது இணையத்தில் பேசு பொருளானது. அத்துடன் பலரது மத்தியில் குழப்பத்தையும் ஏற்படுத்தியது.

ஐ.பி.எல். ஏலம் நெருங்குகின்ற வேளையில் அஸ்வின் பதிவிட்டுள்ளது பரபரப்பானது. பலரும் இது குறித்து வித விதமான கருத்துகளை பதிவிட்டனர். ஆனால் ஒரு சிலர் இதற்கான உண்மை பொருளை கண்டுபிடித்தனர்.

அதன்படி அஸ்வின் பதிவிட்டுள்ளது என்னவெனில், அது ஒரு புத்திசாலித்தனமான வார்த்தை விளையாட்டு.

அவர் சன்னி லியோனை பற்றி எதுவும் குறிப்பிடவில்லை. மாறாக சன்னி லியோன் பெயரிலிருந்து "சன்னி" மற்றும் தெருவின் பெயரால் குறிக்கப்படும் "சந்து" இரண்டையும் இணைத்து ‘சன்னி சந்து’ என்ற இளம் தமிழக கிரிக்கெட் வீரரை குறிப்பால் உணர்த்தியுள்ளார்.

சையத் முஷ்டாக் அலி கோப்பை டி20 தொடரில் நேற்று நடைபெற்ற சவுராஷ்டிரா அணிக்கு எதிரான போட்டியில் தமிழக அணிக்காக ஆடிய சன்னி சந்து 9 பந்துகளில் 30 ரன்கள் அடித்து அணியின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்தார். குறிப்பாக சேத்தன் சக்காரியாவின் ஒரே ஓவரில் 26 ரன்கள் அடித்து பிரமிக்க வைத்தார்.

இதனால் எதிர்வரும் ஐ.பி.எல். ஏலத்தில் சன்னி சந்து கவனிக்கக்கூடிய வீரராக இருப்பார் என்பதை அஸ்வின் இந்த பதிவின் மூலம் உணர்த்தியுள்ளார்.  

Tags:    

மேலும் செய்திகள்