ஜிம்பாப்வேவுக்கு எதிரான டெஸ்ட்: முதல் இன்னிங்சில் 127 ரன்னில் சுருண்ட ஆப்கானிஸ்தான்
ஜிம்பாப்வே தரப்பில் அதிகபட்சமாக பிராட் எவன்ஸ் 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.;
image courtesy:twitter/@ZimCricketv
ஹராரே,
ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி ஒரு டெஸ்ட், மூன்று 20 ஓவர் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இவ்விரு அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டி நேற்று ஹராரேவில் தொடங்கியது. டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி கேப்டன், பந்து வீச்சை தேர்ந்தெடுத்தார். அதன்படி முதல் இன்னிங்சை தொடங்கிய ஆப்கானிஸ்தான், ஜிம்பாப்வே அணியின் பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
இறுதி வரை அந்த அணியால் மீள முடியவில்லை. அந்த அணி முதல் இன்னிங்சில் 32.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 127 ரன்களில் சுருண்டது. அந்த அணியில் அதிகபட்சமாக குர்பாஸ் 37 ரன்கள் அடிக்க, ஜிம்பாப்வே தரப்பில் பிராட் எவன்ஸ் 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய ஜிம்பாப்வே அணி நிதானமாக ஆடி வருகிறது. முதல் நாள் ஆட்ட நேர முடிவில் ஜிம்பாப்வே அணி 38 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 130 ரன்கள் எடுத்திருந்தது. பென் கர்ரன் 52 ரன்களுடனும், பிரன்டன் டெய்லர் 18 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். ஜிம்பாப்வே அணி 3 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. இன்று 2-வது நாள் ஆட்டம் நடக்கிறது.