தமிழக செய்திகள்

காரில் கடத்தி வரப்பட்ட 365 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் - 3 பேர் கைது

திருவாரூர் அருகே புகையிலை பொருட்கள் கடத்தல் தொடர்பாக தனிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

திருவாரூர்,

திருவாரூர் மாவட்டத்தில் போதைப்பொருள் மற்றும் புகையிலை பொருட்கள் விற்பனையை முற்றிலும் தடுக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சதீஷ்குமார் உத்தரவிட்டிருந்தார். அதன்படி போதைப்பொருள் விற்பனை மற்றும் கடத்தலை கண்காணிக்க தனிப்படை அமைக்கப்பட்டு, போலீசார் தீவிர கண்காணிப்பு மற்றும் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்தநிலையில், புகையிலை பொருட்கள் கடத்தல் தொடர்பாக தனிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் திருவாரூர் அருகே காட்டூர் பஸ் நிறுத்தம் பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது கும்பகோணத்தில் இருந்து திருவாரூர் நோக்கி சந்தேகத்திற்கிடமாக வந்த காரை போலீசார் வழிமறித்து சோதனை செய்தனர். விசாரணையில் காரை ஓட்டி வந்தவர் தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தை சேர்ந்த அஷ்ரப் அலி (60) என்பது தெரியவந்தது. மேலும், இவர் மீது கடந்த 2025-ம் ஆண்டு முத்துப்பேட்டை போலீஸ் நிலையத்தில் குட்கா கடத்தல் தொடர்பான வழக்கு நிலுவையில் இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.

தொடர்ந்து மேற்கொண்ட விசாரணையில், மேலும் ஒரு காரில் 365 கிலோ புகையிலை பொருட்கள் கடத்தி வரப்படுவதாக தகவல் கிடைத்தது. உடனடியாக அந்த காரையும் போலீசார் வழிமறித்து சோதனை செய்தனர். அப்போது பெங்களூருவில் இருந்து கடத்தி வரப்பட்ட 365 கிலோ புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

மேலும் இந்த கடத்தல் சம்பவத்தில் தொடர்புடைய ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த மகேந்திரகுமார் (24), மங்கனராம் (20) மற்றும் அஷ்ரப் அலி ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 2 கார்கள், 3 செல்போன்கள் மற்றும் ரூ.20 ஆயிரம் பணமும் பறிமுதல் செய்யப்பட்டது.

இதுகுறித்து திருவாரூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.