கன்னிவாடி:
வெடிமருந்து நிரப்பும் பணி
திண்டுக்கல் அருகே உள்ள பிள்ளையார்நத்தத்தை சேர்ந்தவர் பாலு. இவருக்கு சொந்தமாக, கன்னிவாடி அருகே கசவனம்பட்டி ஊராட்சி குரும்பபட்டியில் கல்குவாரி உள்ளது.
கல்குவாரியில் உள்ள பாறையை உடைப்பதற்காக எந்திரம் மூலம் துளையிட்டு, அதில் வெடிமருந்து நிரப்பும் பணி நேற்று நடந்தது. இந்த பணியில் வேடசந்தூர் தாலுகா கொண்டனம்பட்டியை சேர்ந்த வடிவேல் (வயது 27), சுரைக்காய்பட்டியை சேர்ந்த ராமர், கணேசன், கருப்பு, பரமசிவம் உள்பட 6 தொழிலாளர்கள் ஈடுபட்டனர்.
இதில் வடிவேலை தவிர 5 தொழிலாளர்கள் பாறையில் துளையிட்டு கொண்டிருந்தனர். அந்த துளைகளில், வெடிமருந்து நிரப்பும் பணியை வடிவேல் செய்தார்.
வெடி விபத்து
அப்போது திடீரென ஒரு துளையில் வைக்கப்பட்டிருந்த வெடிபொருள், பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. இதில் வடிவேல் தூக்கி வீசப்பட்டார். இதனை கண்ட சக தொழிலாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
மேலும் கல்குவாரியில், 31 துளைகளில் நிரப்பப்பட்ட வெடிமருந்தும் வெடித்து விடும் என்ற அச்சத்தில் தொழிலாளர்கள் உயிர் பிழைப்பதற்காக அங்கிருந்து வெளியே ஓடி வந்தனர்.
இதுகுறித்து கன்னிவாடி போலீசாருக்கு அவர்கள் தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் வெள்ளையன் தலைமையிலான போலீசார் அங்கு விரைந்தனர்.
தொழிலாளி பலி
பின்னர் போலீசார், கல்குவாரிக்குள் சென்று பார்த்தனர். அப்போது அங்கு ரத்த வெள்ளத்தில் வடிவேல் பரிதாபமாக இறந்து கிடந்தார். அவருடைய உடலை கைப்பற்றிய போலீசார், பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். துளையில் வெடிமருந்து நிரப்பும் போது, ஏற்பட்ட அழுத்தத்தின் காரணமாக இந்த விபத்து நடந்திருக்கலாம் என்று போலீசார் கருதுகின்றனர்.
வெடி விபத்தில் பலியான வடிவேலுவுக்கு திருமணமாகி மனைவி மற்றும் 2 மகள்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது.