ஒரு மாநிலத்தின் வளர்ச்சி என்பது அங்கு சட்டம்-ஒழுங்கு சீராக இருப்பதை அடிப்படையாக வைத்தே அமைகிறது. ஆனால் சமீபகாலங்களாக தமிழ்நாட்டில் கொலை, வெட்டுக்குத்து சம்பவங்கள் பரவலாக அதிகரித்திருப்பது அனைவருக்கும் கவலையளிக்கிறது. எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமிகூட சமீபத்தில் நடந்த கொலைகளை பட்டியலிட்டு ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
ஆத்திரத்தில் நொடிப்பொழுதில் நடக்கும் கொலைகளுக்காக அரசையோ, காவல்துறையையோ குறைசொல்ல முடியாது. ஆனால் ரவுடிகளும், கூலிப்படைகளும் செய்யும் கொலைகளை போலீஸ் நினைத்தால் தடுத்துவிடமுடியும். சில தினங்களுக்கு முன்பு சென்னையில் பகுஜன் சமாஜ் கட்சியைச் சேர்ந்த ஆம்ஸ்ட்ராங் ரவுடிக்கும்பலால் துடிக்க துடிக்க கொலை செய்யப்பட்டார். இது முன்விரோதத்தால் திட்டமிட்டு நடத்தப்பட்ட கொலையாகும். இந்த கொலை குறித்து முன்கூட்டியே உளவுப்பிரிவு போலீசார், சென்னை மாநகர போலீசுக்கு எச்சரிக்கை செய்தி அனுப்பியிருந்ததாகவும் தகவல்கள் வந்துள்ளன. இந்த கொலை தொடர்பாக 11 பேர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். அந்த கட்சி தலைவர் மாயாவதி உத்தரபிரதேசத்தில் இருந்து தனிவிமானத்தில் சென்னைக்கு வந்து இறுதி அஞ்சலி செலுத்தினார். முதல்-அமைச்சர் மு க ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, பா ம க தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் என்று பல அரசியல் கட்சி தலைவர்கள் ஆம்ஸ்ட்ராங்கின் படத்துக்கு அஞ்சலி செலுத்திவிட்டு, அவரது மனைவி பொற்கொடிக்கு ஆறுதல் சொல்லி வந்தனர்.
''கொலைபாதக செயலில் ஈடுபட்டவர்களை சட்டத்தின் முன்நிறுத்தி கடும் தண்டனையை பெற்றுத்தருவோம், கொலைக்குற்றத்தின் பின்னணியில் இருப்பது யாராக இருந்தாலும் அவர்களை கண்டறிந்து தண்டிப்பதில் எனது அரசு உறுதியாக உள்ளது'' என்று முதல்-அமைச்சர் மு க ஸ்டாலின் சூளுரைத்துள்ளார். இதை செயலில் காட்ட அவர் அதிரடியாக தமிழ்நாடு சட்டம்-ஒழுங்கு பிரிவு போலீஸ் கூடுதல் போலீஸ் டைரக்டர் ஜெனரலாக டேவிட்சன் தேவாசீர்வாதத்தையும், சென்னை பெருநகர போலீஸ் கமிஷனராக அருணையும் நியமித்துள்ளார். இதுமட்டுமல்லாமல் மேலும் பல நகரங்களுக்கு கமிஷனர்கள் உள்பட 18 மூத்த ஐ.பி.எஸ். அதிகாரிகளை இடமாறுதல் செய்து உத்தரவிட்டுள்ளார்.
உடனடியாக சென்னை தலைமை செயலகத்தில் முதல்-அமைச்சர் மு க ஸ்டாலின் சட்டம்-ஒழுங்கு ஆலோசனை கூட்டத்தைக்கூட்டி புதிதாக பொறுப்பேற்றுள்ள 2 உயர்அதிகாரிகளுக்கும் ரவுடிகளின் கொட்டத்தை அடக்க முழு அதிகாரத்தையும் கொடுத்துள்ளார்.
'சென்னை போலீஸ் கமிஷனர் ரவுடிகளுக்கு அவர்களுடைய மொழியிலேயே பதில் அளிக்கப்படும்' என்று சொல்லியிருக்கிறார். சட்டம்-ஒழுங்கு பிரிவு கூடுதல் டி.ஜி.பி. டேவிட்சன் தேவாசீர்வாதம், 'தமிழகம் முழுவதும் ரவுடிகளை ஒழிப்பதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும். சின்ன ரவுடிகளெல்லாம் முளையிலேயே கிள்ளியெறியப்படுவார்கள். குற்றச்செயல்களில் ஈடுபடும் ரவுடிகள் வெளியே தலைகாட்டமுடியாத அளவுக்கு கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அவர்கள் தமிழக போலீசுக்கு பயந்து வெளிமாநிலங்களுக்கு தப்பியோடும் அளவுக்கு எங்களது நடவடிக்கைகள் இருக்கும்' என்று உறுதிபட கூறியிருப்பது போலீசார் எடுக்கப்போகும் உத்வேகத்தை பறைசாற்றியது.
போலீஸ் நினைத்தால் நிச்சயமாக எந்த ரவுடியின் கொட்டத்தையும் அடக்கிவிடமுடியும். தமிழக போலீசுக்கு ரவுடிகளை அடக்கும் முழுத்திறனும் உள்ளது. உயர் அதிகாரிகளின் இந்த உறுதிப்பாடு தமிழக மக்களுக்கு முழுநம்பிக்கையை கொடுத்துள்ளது. உயர்அதிகாரிகள் விடுத்துள்ள சவாலை நிறைவேற்றும் பொறுப்பு மேல்அதிகாரிகளிடம் இருந்து அனைத்து காவலர்கள் வரை இருக்கிறது. ஆக இனி ரவுடிகளின்மீது போலீசாரின் பார்வை கடினமாகவும், நடவடிக்கை இரும்புக்கரம் கொண்டும் இருக்கும் என்பதில் சந்தேகமேயில்லை. மறைந்த டி.ஜி.பி. ஸ்ரீபால் எங்கும் போலீஸ் தலை தென்படவேண்டும் என்பார். அதை ஆங்கிலத்தில் 'விசிபிள் போலீசிங்' என்பார்கள். அதை ஒரு வேதவாக்காக எடுத்துக்கொள்வது எந்த காலத்துக்கும் பொருந்தும்.