10 நிமிடத்தில் செய்யலாம் சுவையான கேரட் சாதம்!

தினத்தந்தி

காலை நேரத்தில் பள்ளிக்குச் செல்லும் குழந்தைகளுக்கோ அல்லது அலுவலகத்திற்குச் செல்லும் போதோ விரைவாக சமைக்க ஏற்ற சிறந்த உணவாக இந்த கேரட் சாதம் இருக்கும். சுவையாகவும் எளிமையாகவும் செய்யக்கூடிய இந்த சாதத்தை லஞ்ச் பாக்ஸுக்கும் எடுத்துச் செல்லலாம்.

தேவையான பொருட்கள்: சாதம் - 2 கப், கேரட் - 2, கறிவேப்பிலை - சிறிதளவு, பிரியாணி இலை - 1, கிராம்பு - 3, பட்டை - 1 இன்ச், ஏலக்காய் - 1, வெங்காயம் - 2, பச்சை மிளகாய் - 2, இஞ்சி பூண்டு விழுது - 1 டீஸ்பூன், கொத்தமல்லி – சிறிதளவு, மல்லித்தூள் - 1 டீஸ்பூன், முந்திரி - 2 டேபிள்ஸ்பூன், உப்பு - தேவையான அளவு, எண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன், நெய் - 1 டேபிள்ஸ்பூன்.

செய்முறை: முதலில் கேரட்டின் தோலை நீக்கி நன்றாகத் துருவிக்கொள்ளவும். வெங்காயம், பச்சை மிளகாய் மற்றும் கொத்தமல்லியைப் பொடியாக நறுக்கி வைத்துக்கொள்ளவும்.

கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் மற்றும் நெய் ஊற்றி சூடானதும் முந்திரியை சேர்த்து பொன்னிறமாக வறுத்து தனியாக எடுத்து வைக்கவும்.

அதே கடாயில் கிராம்பு, பட்டை, ஏலக்காய் மற்றும் பிரியாணி இலையைச் சேர்த்து தாளிக்கவும். பின்னர் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கி, வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.

அடுத்து பச்சை மிளகாய், கறிவேப்பிலை மற்றும் கொத்தமல்லி சேர்த்து வதக்கவும். பின்னர் துருவிய கேரட்டை சேர்த்து, குறைந்த தீயில் 7 முதல் 8 நிமிடங்கள் நன்றாக வதக்கிக்கொள்ளவும்.

கேரட் நன்றாக வதங்கியதும் தேவையான அளவு உப்பு மற்றும் மல்லித்தூள் சேர்த்து நன்றாகக் கிளறவும். பின்னர் வேகவைத்து உதிரியாக வைத்துள்ள சாதத்தை சேர்த்து மெதுவாகக் கிளறவும்.

சாதம் மற்றும் கேரட் கலவை நன்றாக சேர்ந்ததும் சுமார் 3 நிமிடங்கள் கிளறி அடுப்பை அணைக்கவும். இறுதியாக வறுத்த முந்திரியை மேலே தூவி பரிமாறினால் சுவையான கேரட் சாதம் தயார்!

கரண்டி ஆம்லெட் செய்வது எப்படி?