தினத்தந்தி
இன்றைய இளம் தலைமுறையினரிடையே வாசனை திரவியங்களை பயன்படுத்தும் பழக்கம் அதிகரித்து வருகிறது. குறிப்பாக குளிர்காலங்களில் பலரும் தினசரி வாசனை திரவியங்களை பயன்படுத்துகின்றனர்.
வாசனை திரவியங்கள் உடலுக்கு புத்துணர்ச்சியையும் நறுமணத்தையும் கொடுத்தாலும், அதில் இருக்கும் சில ரசாயனங்கள் உடல்நலத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
பல வாசனை திரவியங்களில் ‘பித்தலேட்டுகள்’ போன்ற வேதிப்பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன. இந்த ரசாயனங்கள் நெயில் பாலிஷ், கூந்தல் பராமரிப்பு பொருட்கள் மற்றும் பிளாஸ்டிக் தயாரிப்புகளிலும் இடம்பெறுகின்றன.
இந்த வேதிப்பொருட்கள் உடலின் ஹார்மோன் சமநிலையை பாதிக்கக்கூடும். குறிப்பாக இன்சுலின் எதிர்ப்பு, இதய நோய் மற்றும் குழந்தைகளின் வளர்ச்சி குறைபாடு போன்ற பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும் அபாயம் இருப்பதாக கூறப்படுகிறது.
வாசனை திரவியங்களில் உள்ள சில ரசாயனங்கள் குழந்தைகளின் மூளை வளர்ச்சியையும் பாதிக்கக்கூடும் என்று ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கின்றனர்.
மேலும் நாளமில்லா சுரப்பி அமைப்பில் மாற்றங்களை ஏற்படுத்தி, தைராய்டு பிரச்சினைகள், மனநிலை மாற்றங்கள் மற்றும் இனப்பெருக்க சிக்கல்களுக்கும் காரணமாக அமையலாம்.
வாசனை திரவியங்களை அதிகமாக பயன்படுத்துவதற்கு பதிலாக, இயற்கை மூலப்பொருட்களால் தயாரிக்கப்படும் ரசாயனமில்லா பொருட்களை தேர்வு செய்வது நல்லது.
அதேபோல் துணி துவைக்கும் வாசனை திரவியங்கள் மற்றும் அதிக மணம் கொண்ட பராமரிப்பு பொருட்களை அளவோடு பயன்படுத்துவது உடல்நலத்திற்கு பாதுகாப்பானதாக இருக்கும்.