தினத்தந்தி
பாய் வீடுகளில் செய்யப்படும் பிரியாணிக்கு இருப்பது போலவே, அங்குள்ள நெய் சாதத்திற்கும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். மணம் கமழும் இந்த நெய் சாதம், சிக்கன் அல்லது மட்டன் கிரேவியுடன் சேர்த்து சாப்பிட்டால் அதன் சுவை இன்னும் பல மடங்கு அதிகரிக்கும்.
உணவகங்களில் கிடைக்கும் அதே சுவையில் பாய் வீட்டு ஸ்டைல் நெய் சாதத்தை வீட்டிலேயே எளிதாக செய்யலாம். சரியான மசாலா மற்றும் நெய்யின் அளவு இருந்தாலே இந்த ரெசிபி அசத்தலாக இருக்கும்.
இதற்கு 2 கப் பாசுமதி அரிசி, 4 டேபிள் ஸ்பூன் நெய், 3 பெரிய வெங்காயம், 5 பச்சை மிளகாய், 1 டேபிள் ஸ்பூன் இஞ்சி-பூண்டு விழுது, 1 டேபிள் ஸ்பூன் முந்திரி, 4 ஏலக்காய், 2 பட்டை துண்டு, 6 கிராம்பு, 2 அன்னாசிப்பூ, 2 பிரியாணி இலை, சிறிதளவு கடல்பாசி, 4 கப் தண்ணீர், புதினா மற்றும் தேவையான அளவு உப்பு தேவை.
முதலில் பாசுமதி அரிசியை நன்றாகக் கழுவி, தேவையான அளவு தண்ணீரில் ஒரு மணி நேரம் ஊறவைக்கவும். இதனால் சாதம் நீளமாகவும் உதிரியாகவும் வெந்து வரும்.
அகலமான குக்கரில் நெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை, கிராம்பு, ஏலக்காய், அன்னாசிப்பூ, பிரியாணி இலை மற்றும் கடல்பாசியை சேர்த்து தாளிக்கவும். பின்னர் முந்திரிப்பருப்பை சேர்த்து லேசாக பொன்னிறமாகும் வரை வறுக்கவும்.
அடுத்து நீளவாக்கில் நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்கவும். பிறகு இஞ்சி-பூண்டு விழுது மற்றும் கீறிய பச்சை மிளகாயை சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்குங்கள்.
இப்போது ஊறவைத்த பாசுமதி அரிசியை வடித்து சேர்த்து, நெய்யுடன் 5 நிமிடங்கள் மெதுவாகக் கிளறி வதக்கவும். பின்னர் 4 கப் தண்ணீர், தேவையான உப்பு மற்றும் பொடியாக நறுக்கிய புதினாவை சேர்த்து நன்றாகக் கலக்கவும்.
உப்பு சரியாக உள்ளதா என்று பார்த்து குக்கரை மூடி, மிதமான தீயில் 2 விசில் வரும் வரை வேகவிடுங்கள். அழுத்தம் தானாக குறைந்த பிறகு மூடியைத் திறந்து, சாதம் உடையாமல் மெதுவாக கிளறவும்.
மணம் கமழும் பாய் வீட்டு ஸ்டைல் நெய் சாதம் தயார். இதை சிக்கன் கிரேவி, மட்டன் கிரேவி, சிக்கன் சுக்கா, முட்டை மசாலா அல்லது வெங்காய ரைத்தாவுடன் பரிமாறினால் உணவின் சுவை இன்னும் அதிகரிக்கும். வீட்டிலேயே ஹோட்டல் சுவையை அனுபவிக்க இந்த நெய் சாதம் ஒரு சிறந்த தேர்வாக இருக்கும்.