தினத்தந்தி
குழந்தைகளுக்கு சத்தான உணவு கொடுப்பது மட்டுமல்ல, அவர்கள் சாப்பிட்ட உணவு சரியாகச் செரிமானமாகி, மலம் சீராக வெளியேறுகிறதா என்பதையும் பெற்றோர் கவனிக்க வேண்டும். செரிமானம் சரியாக இல்லையெனில் மலச்சிக்கல் ஏற்பட்டு குழந்தைகள் அவதிப்பட நேரிடும்.
பொதுவாக ஒரு வயதுக்கு கீழ் தாய்ப்பால் மட்டுமே குடிக்கும் குழந்தைகளுக்கு மலச்சிக்கல் பிரச்சினை அரிதாகவே ஏற்படும். தாய்ப்பால் குடிக்கும் குழந்தை மலம் கழிக்கவில்லை என்றால், போதுமான அளவு பால் கிடைக்கவில்லையா என்பதை கவனிக்க வேண்டும். பசும்பால், பாக்கெட் பால் மற்றும் திட உணவுகளைத் தொடங்கிய பிறகே பெரும்பாலும் மலச்சிக்கல் ஏற்படுகிறது.
குழந்தைகளுக்கு மலச்சிக்கல் ஏற்பட முக்கிய காரணங்களில் நார்ச்சத்து மற்றும் நீர்ச்சத்து குறைவான உணவு, போதுமான தண்ணீர் குடிக்காதது, விளையாட்டில் மூழ்கி மலம் கழிப்பதை தள்ளிப்போடுவது, கழிவறை பயம் மற்றும் ஒழுங்கற்ற உணவுப் பழக்கம் ஆகியவை அடங்கும்.
மலம் இரண்டு அல்லது மூன்று நாட்கள் கழிக்காமல் இருப்பது, மலம் கழிக்கும் போது வலியால் அழுவது, மலம் கழிக்க மறுத்து பிடிவாதம் பிடிப்பது, மலம் கழிக்க வேண்டிய பயத்தில் சாப்பிடத் தயங்குவது போன்றவை மலச்சிக்கலின் முக்கிய அறிகுறிகளாகும்.
மலச்சிக்கலை சரிசெய்ய முதலில் குழந்தைகளின் உணவுப் பழக்கத்தில் மாற்றம் கொண்டுவர வேண்டும். நார்ச்சத்து மற்றும் நீர்ச்சத்து அதிகம் உள்ள உணவுகளை தினமும் சரியான அளவில் கொடுத்தால் மலச்சிக்கல் படிப்படியாகக் குறையும்.
முருங்கைக்காய், வெண்டைக்காய், அவரைக்காய், சுரைக்காய், முள்ளங்கி போன்ற காய்கறிகளையும், தினமும் ஒரு வகை கீரையையும் உணவில் சேர்ப்பது நல்லது. சிறிய குழந்தைகளுக்கு இவற்றை நன்றாக வேகவைத்து மசித்து கொடுக்கலாம். பெரிய குழந்தைகள் நன்றாக மென்று சாப்பிடும் பழக்கத்தை வளர்க்க வேண்டும்.
வாழைப்பழம் இயற்கையான மலமிளக்கியாக செயல்படுகிறது. குறிப்பாக மலை வாழைப்பழம் மலச்சிக்கலைக் குறைக்க உதவுகிறது. வாழைப்பழத்தை தனியாக சாப்பிட விரும்பாத குழந்தைகளுக்கு பால் அல்லது பழக் கலவையுடன் சேர்த்தும் கொடுக்கலாம்.
குழந்தைகள் தினமும் போதுமான அளவு தண்ணீர் குடிப்பதை உறுதி செய்ய வேண்டும். அதேபோல், தினமும் ஒரே நேரத்தில் கழிவறைக்குச் செல்லும் பழக்கத்தை உருவாக்கினால், மலச்சிக்கல் ஏற்படும் வாய்ப்பு குறையும். உடல் இயக்கமும் செரிமானத்தை மேம்படுத்த உதவுவதால், குழந்தைகளை வெளியில் விளையாட ஊக்குவிக்க வேண்டும்.
உணவு மற்றும் வாழ்க்கை முறையில் மாற்றம் செய்தும் மலச்சிக்கல் நீடித்தால் அல்லது மலம் கழிக்கும் போது ரத்தப்போக்கு, கடுமையான வயிற்றுவலி, வாந்தி போன்ற அறிகுறிகள் இருந்தால் உடனடியாக குழந்தைகள் நல மருத்துவரை அணுக வேண்டும். சரியான பராமரிப்பின் மூலம் குழந்தைகளின் மலச்சிக்கலை எளிதாகக் கட்டுப்படுத்தி, அவர்களின் செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம்.