இந்தியாவின் சிறந்த தேசிய பூங்கா பட்டியலில் இடம்பிடித்த மூணாறு இரவிகுளம்!

தினத்தந்தி

கேரள மாநிலம் மூணாறு அருகே அமைந்துள்ள இயற்கை எழில் கொஞ்சும் இரவிகுளம் தேசிய பூங்கா, இந்தியாவின் சிறந்த தேசிய பூங்காக்களில் முதலிடத்தைப் பிடித்துள்ளது. இந்தச் செய்தி இயற்கை ஆர்வலர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகம் நியமித்த நிபுணர் குழு, 2020 முதல் 2025 வரையிலான காலகட்டத்தில் நாட்டின் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகளை ஆய்வு செய்தது.

இந்த மதிப்பீட்டில் நாடு முழுவதும் உள்ள 438 தேசிய பூங்காக்கள் பங்கேற்றன. பல்வேறு கட்டங்களாக நடைபெற்ற ஆய்வில், மூணாறு இரவிகுளம் தேசிய பூங்கா சிறந்த பூங்காவாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

இரவிகுளம் தேசிய பூங்காவும், ஜம்மு-காஷ்மீரில் உள்ள டாச்சிகம் தேசிய பூங்காவும் தலா 92.97 சதவீத மதிப்பெண்களைப் பெற்று முதலிடத்தைப் பகிர்ந்துகொண்டன.

சர்வதேச இயற்கைப் பாதுகாப்பு அமைப்புகளின் வழிகாட்டுதலின்படி, ஆறு முக்கிய பாதுகாப்பு அளவுகோல்கள் மற்றும் 32 தரவுகளின் அடிப்படையில் இந்த மதிப்பீடு மேற்கொள்ளப்பட்டது.

மேற்கு தொடர்ச்சி மலையின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ள இரவிகுளம் தேசிய பூங்கா, சுமார் 97 சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்டுள்ளது. அழிந்து வரும் நீலகிரி வரையாடுகளின் முக்கிய வாழிடமாகவும் இது விளங்குகிறது.

1975ஆம் ஆண்டு மே 31ஆம் தேதி வனவிலங்கு சரணாலயமாக அறிவிக்கப்பட்ட இரவிகுளம், 1978ஆம் ஆண்டு கேரளாவின் முதல் தேசிய பூங்காவாக மாற்றப்பட்டது. இயற்கை வளங்களைப் பாதுகாப்பதில் முக்கியப் பங்காற்றி வருகிறது.

தற்போது தனது 50 ஆண்டுகால பயணத்தை நிறைவு செய்யும் நிலையில் உள்ள இரவிகுளம் தேசிய பூங்கா, இந்தியாவின் சிறந்த பூங்காக்களில் இடம்பிடித்திருப்பது கேரள மாநிலத்திற்குப் பெருமை சேர்த்துள்ளது.

சபரிமலை ஐயப்பன் ; விரதம் இருக்கும் பக்தர்கள் கடைப்பிடிக்க வேண்டியவை!