தினத்தந்தி
விஜய்யின் கடைசி படமான 'ஜனநாயகன்', பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரைக்கு வருவதாக இருந்தது. ஆனால், 'சென்சார்' பிரச்சினையால் படம் இன்று வரை வெளியாகவில்லை.
தொடர்ந்து கரூர் கூட்ட நெரிசலில் 41 பேர் இறந்த துயரச் சம்பவம் தொடர்பாக, நடிகர் விஜய்யிடம் நடத்தப்பட்டு வரும் சி.பி.ஐ. விசாரணையாலும் அவர் மன உளைச்சலுக்கு ஆளானார்.
மேலும், அவரது மனைவி சங்கீதா தொடர்ந்த விவாகரத்து வழக்கு, அவரை மேலும் மன உளைச்சலுக்கு ஆளாக்கியது.
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல்-அமைச்சர் வேட்பாளராக விஜய் பெரம்பூர், திருச்சி கிழக்கு ஆகிய 2 தொகுதிகளில் அவர் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் தேர்தலில் போட்டியிடும் ஒவ்வொரு வேட்பாளரும், வேட்புமனு தாக்கலின்போது தங்களுடைய மற்றும் தனது மனைவியின் பெயரில் உள்ள அசையும் மற்றும் அசையா சொத்து விவரங்களையும் தாக்கல் செய்ய வேண்டும்.
எனவே அவ்வாறு விஜய் காட்டும் சொத்து மதிப்புக்கு சங்கீதா எதுவும் ஆட்சேபனை தெரிவித்தால், வேட்புமனுவை ஏற்பதிலும் சிக்கல் ஏற்படும்.
பெரம்பூர் தொகுதியில் விஜய் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்படும் பட்சத்தில், அவரை எதிர்த்து அமைச்சர் பி.கே.சேகர்பாபுவை களம் இறக்கலாமா? என்று தி.மு.க. தலைமை யோசித்து வருகிறது.
இப்படி, 'ஜனநாயகன்' பட ரிலீஸ் விவகாரம் முதல் சி.பி.ஐ. விசாரணை, மனைவி சங்கீதா விவாகரத்து வழக்கு, இப்போது தேர்தலில் போட்டியிடுவதில் சிக்கல் என நடிகர் விஜய்யை பிரச்சினைகள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன.