தினத்தந்தி
இளைய சமூகத்தினருக்கும் பெரும் அச்சுறுத்தலாக மாறியிருக்கும் புகைப்பழக்கம், ஒரு காலத்தில் மருத்துவ குணம் நிறைந்த பழக்கமாகக் கருதப்பட்டது.
பின்னர் அது எப்படி உடல்நலத்திற்கு தீங்கு விளைவிக்கும் பொருளாக மாறியது என்பதை தெரிந்து கொள்வோம். புகையிலை என்பது இன்றோ நேற்றோ வந்த பொருள் அல்ல.
‘புது உலகம்’ என அழைக்கப்பட்ட அமெரிக்காவுக்குள் ஐரோப்பியர்கள் நுழைந்த காலத்திலேயே தென் அமெரிக்க பழங்குடிகளால் புகையிலை பயன்படுத்தப்பட்டு வந்தது.
மெக்சிகோவில் மாயன் இனத்தவர்களால் செதுக்கப்பட்ட பழங்கால சிற்பங்களும் கல்வெட்டுகளும் பல கிடைத்துள்ளன. அவற்றில் புகையிலை பயன்பாடு பற்றிய குறிப்புகள் இடம்பெற்றுள்ளன.
அந்த கல்வெட்டுகள் ஆறாம் நூற்றாண்டைச் சேர்ந்தவை என்று கணக்கிடப்பட்டுள்ளது. மக்கள் புகையிலையை மெல்வது, புகைப்பது, உடலில் பூசிக்கொள்வது போன்ற பல வழிகளில் பயன்படுத்தியுள்ளனர்.
தலைவலி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்தல், ஞாபகமறதி போன்றவற்றிற்கு புகையிலை மருந்தாகப் பரிந்துரைக்கப்பட்டது.
1492ஆம் ஆண்டு அமெரிக்காவைக் கண்டறிந்த கொலம்பஸ் தான் முதன்முதலில் புகையிலைச் செடியை ஐரோப்பிய கண்டத்துக்குக் கொண்டு சென்றார். அதன் பின்னரே புகையிலை உலகின் பிற பகுதிகளுக்கும் பரவியது.
ஐரோப்பியர்கள்தான் இந்தியாவுக்கு புகையிலையை அறிமுகப்படுத்தினர். 17ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் அக்பரின் ஆட்சிக்காலத்தில் போர்ச்சுகீசியர்கள் இந்தியாவிற்கு புகையிலைச் செடியைக் கொண்டு வந்தனர்.
19ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் சென்னையிலிருந்து மைசூர், கர்நாடகம், மலபார் போன்ற பகுதிகளில் பயணம் செய்த பிரான்சிஸ் புக்கானன், கர்நாடகம், மலபார், கோயமுத்தூர் மற்றும் மைசூர் சமஸ்தானங்களில் பரந்த அளவில் புகையிலை பயிரிடப்பட்டதாகக் குறிப்பிடுகிறார்.
தமிழ்நாட்டில் மதுரை, திருச்சி, நெல்லை போன்ற பகுதிகளில் புகையிலை சிறப்பாக பயிரிடப்பட்டது. அழகன் குளம், பரத்தை வயல், காங்கேயம் ஆகியவை புகையிலை செழித்து விளைந்த இடங்களாகும்.
வெகு சமீபத்தில் டச்சுக்காரர்கள் புகையிலை ஆண்மைக் குறைவை ஏற்படுத்தும் என்பதை கண்டறிந்தனர். யங்யாஷி என்ற சீன அறிஞர், புகையிலை நுரையீரலை சீரழிக்கும் என்று கூறியுள்ளார். இப்போது புகையிலை ஆண்டுதோறும் சுமார் 9 லட்சம் இந்தியர்களின் உயிரைப் பறித்து வருகிறது.