கடை அதிரசத்தை மிஞ்சும் வீட்டு அதிரசம்... இந்த முறையில் செய்து பாருங்கள்!

தினத்தந்தி

தீபாவளி உள்ளிட்ட பண்டிகைக் காலங்களில் விரும்பிச் செய்யப்படும் இனிப்பு வகைகளில் அதிரசமும் ஒன்று. அரிசி, வெல்லம் கொண்டு வீட்டிலேயே மென்மையான, சுவையான அதிரசம் தயாரிக்கலாம்.

தேவையான பொருட்கள்; பச்சரிசி – அரை கிலோ, வெல்லம் – 300 கிராம், ஏலக்காய் – சிறிதளவு, நெய் – 1 மேசைக்கரண்டி, எண்ணெய் – பொரிப்பதற்குத் தேவையான அளவு.

செய்முறை; பச்சரிசியை நான்கு மணி நேரம் தண்ணீரில் ஊறவைக்கவும். பின்னர் தண்ணீரை நன்கு வடித்து, வெள்ளைத் துணியில் பரப்பி வைக்கவும்.

அரிசி முழுமையாகக் காய்வதற்கு முன்பே, சிறிது ஈரப்பதம் இருக்கும்போது மிக்ஸியில் நைசாக அரைத்துக் கொள்ளவும். பின்னர் மாவைச் சலித்து வைத்துக் கொள்ளவும்.

வெல்லத்தைப் பொடித்து, அடிகனமான பாத்திரத்தில் சேர்க்கவும். வெல்லம் மூழ்கும் அளவுக்குத் தண்ணீர் ஊற்றி சூடாக்கி, பாகுபதம் வரும் வரை கொதிக்கவிடவும்.

வெல்லப்பாகு பிசுபிசுப்பான பதத்திற்கு வந்ததும், ஏலக்காயைப் பொடித்துச் சேர்க்கவும். பின்னர் அரிசி மாவைச் சிறிது சிறிதாகச் சேர்த்துக் கட்டிகள் இல்லாமல் கிளறவும்.

மாவு நன்கு வெந்து கெட்டியான பதத்திற்கு வந்ததும் நெய் சேர்த்துக் கிளறி இறக்கவும். மாவு ஆறியதும் ஈரப்பதம் இல்லாத, காற்றுப் புகாத பாத்திரத்தில் போட்டு மூடி வைக்கவும்.

இந்த மாவை இரண்டு நாட்கள் கழித்துப் பயன்படுத்தினால் அதிரசத்தின் சுவை நன்றாக இருக்கும். தேவையான அளவு மாவை எடுத்து சிறிய உருண்டைகளாக உருட்டி, தட்டையாகத் தட்டவும்.

வாணலியில் எண்ணெயைக் காயவைத்து, தட்டிய அதிரசங்களை மிதமான தீயில் பொன்னிறமாகப் பொரித்தெடுக்கவும். பின்னர் எண்ணெயை வடித்து, சமையல் காகிதத்தில் வைத்து எடுக்கவும்.

சுவையான, பாரம்பரியமான அதிரசம் தயார்! குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பிச் சாப்பிடும் இந்த இனிப்பை வீட்டிலேயே செய்து மகிழுங்கள்.

தீபாவளி இனிப்பு ஸ்பெஷல்: பிரட்டில் இப்படி ஒரு இனிப்பா?