உருளைக்கிழங்கு காரக் குழம்பு செய்வது எப்படி?

தினத்தந்தி

சூடான சாதத்தில் ஊற்றி சாப்பிட உருளைக்கிழங்கு காரக் குழம்பு மிகவும் சுவையாக இருக்கும். எளிமையான முறையில் வீட்டிலேயே இந்த காரக் குழம்பை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்: உருளைக்கிழங்கு - ¼ கிலோ, பூண்டு - 10 பல், வெங்காயம் - 1, தக்காளி - 1, கீறிய பச்சை மிளகாய் - 3, புளி - நெல்லிக்காய் அளவு, கடுகு – ½ தேக்கரண்டி, உளுத்தம்பருப்பு - ½ தேக்கரண்டி, சீரகம் – ½ தேக்கரண்டி, மஞ்சள் தூள் - ½ தேக்கரண்டி, கடலைப்பருப்பு - 1 தேக்கரண்டி, குழம்பு பொடி – 1 தேக்கரண்டி, கறிவேப்பிலை – சிறிதளவு, எண்ணெய் - 1 மேசைக்கரண்டி, மிளகாய்த்தூள் - தேவையான அளவு, உப்பு - தேவையான அளவு.

செய்முறை; முதலில் உருளைக்கிழங்கு, வெங்காயம், தக்காளி ஆகியவற்றை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். புளியைத் தண்ணீரில் ஊறவைத்து நன்றாகக் கரைத்து வைத்துக்கொள்ளவும்.

கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுத்தம்பருப்பு, சீரகம், கடலைப்பருப்பு சேர்த்து தாளிக்கவும். பின்னர் நறுக்கிய வெங்காயம், பூண்டு, கீறிய பச்சை மிளகாய் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து நன்றாக வதக்கவும்.

வெங்காயம் நன்றாக வதங்கியதும் நறுக்கிய தக்காளியை சேர்த்து குழையும்வரை வதக்கவும். தக்காளி நன்றாக வெந்ததும் நறுக்கிய உருளைக்கிழங்கு மற்றும் சிறிதளவு உப்பு சேர்த்து நன்றாக வதக்கவும்.

அடுத்து மஞ்சள் தூள், மிளகாய்த்தூள் மற்றும் குழம்பு பொடி சேர்த்து நன்றாகக் கிளறி வதக்கவும். பின்னர் கரைத்து வைத்துள்ள புளித்தண்ணீரை ஊற்றி, தேவையான அளவு உப்பு சேர்க்கவும்.

குழம்பு நன்றாகக் கொதித்து உருளைக்கிழங்கு வெந்ததும் அடுப்பை அணைக்கவும். சுவையான உருளைக்கிழங்கு காரக் குழம்பு தயார். இதை சூடான சாதத்துடன் பரிமாறி சுவைக்கலாம்.

ஹோட்டல் ஸ்டைலில் சுவையான பரோட்டா செய்வது எப்படி?