தினத்தந்தி
கேரளாவில் மிகவும் பிரபலமான பாரம்பரிய இனிப்புகளில் பலாப்பழ பாயாசமும் ஒன்று. பலாப்பழத்தின் இயற்கை இனிப்பும் தேங்காய் பாலும் சேர்ந்து இந்த பாயாசத்திற்கு தனித்துவமான சுவையை தருகின்றன. வீட்டிலேயே எளிய முறையில் இந்த சுவையான பாயாசத்தை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
பலாப்பழம் - 20 பல், தேங்காய் பால் - 2 கப், வெல்லம் - 150 கிராம், ஏலக்காய் - 6, முந்திரி - தேவையான அளவு, பிஸ்தா - தேவையான அளவு, நெய் - தேவையான அளவு
செய்முறை: முதலில் பலாப்பழத்தின் கொட்டைகளை நீக்கி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். அதில் ஒரு சில பலாப்பழங்களை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
பின்னர் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி பலாப்பழத்தை நன்றாக வேக வைத்து ஆற விட வேண்டும். ஆறிய பிறகு அதை மிக்சியில் போட்டு மிருதுவாக அரைத்துக் கொள்ளவும்.
அடுத்து ஒரு பாத்திரத்தில் வெல்லம் சேர்த்து சிறிதளவு தண்ணீர் ஊற்றி கரைய விடவும். வெல்லம் முழுவதும் கரைந்ததும் அதை வடிகட்டி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
இப்போது கடாயில் சிறிதளவு நெய் ஊற்றி முந்திரி மற்றும் பிஸ்தாவை பொன்னிறமாக வறுத்து எடுத்து வைக்கவும்.
பின்னர் ஒரு பாத்திரத்தில் வெல்லப் பாகை ஊற்றி கொதிக்க விடவும். அதில் அரைத்த பலாப்பழ விழுதை சேர்த்து நன்றாக கலக்க வேண்டும்.
அதன்பின் ஏலக்காய் தூள் மற்றும் தேங்காய் பாலை சேர்த்து ஒரு கொதி வரும் வரை சமைக்கவும். இறுதியாக வறுத்த முந்திரி, பிஸ்தா மற்றும் பொடியாக நறுக்கிய பலாப்பழத்தை சேர்க்கவும்.
மேலும் ஒரு தேக்கரண்டி நெய் சேர்த்து அடுப்பை அணைத்தால் மணமும் சுவையும் நிறைந்த பலாப்பழ பாயாசம் தயார்.